முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி மாறி ஓட்டு: கமிட்டி அமைக்கிறது கர்நாடக பா.ஜ.க.

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.24 - ஜனாதிபதி தேர்தலில் கட்சி மேலிட உத்தரவை மீறி ஓட்டுப்போட்டவர்களை கண்டறிய கமிட்டி அமைக்க கர்நாடக மாநில பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.  நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பி.ஏ.சங்மா போட்டியிட்டார். சங்மாவை பாரதிய ஜனதா ஆதரித்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிட உத்தரவை மீறி பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். இதனால் பாரதிய ஜனதா அதிருப்தி அடைந்துள்ளது. இந்தமாதிரி கட்சி மாறி ஓட்டுப்போட்டவர்கள் யார் யார் என்பதை கண்டறிய கமிட்டி அமைக்கப்படும் என்று மாநில பா.ஜ. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஷெட்டர், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவை சேர்ந்த 14 பேர் கட்சிமாறி ஓட்டுப்போட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாதிரி கட்சி மாறி ஓட்டுப்போட்டவர்கள் யார் யார் என்பதை அறிய விரைவில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றார். கட்சி மாறி ஓட்டுப்போட்ட விஷயத்தை மேலிடம் மிகவும் கவனத்தில் கொண்டுள்ளது. கமிட்டியை மாநில தலைவரும் துணைமுதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா விரைவில் அறிவிப்பார். கமிட்டியின் அறிக்கையின் பேரில் அவர் நடவடிக்கையும் எடுப்பார் என்றும் ஷெட்டர் மேலும் கூறினார். கர்நாடகத்தில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 119 பேர் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 71 எம்.எல்.ஏ.க்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 28 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தால் அவருக்கு 99 எம்.எல்.ஏல்.ஏ.க்கள் மட்டுமே வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர். சங்மாவுக்கு 103 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர். அதனால் பாரதிய ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் பலரும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எப்படியோ கர்நாடக பாரதிய ஜனதாவில் கோஷ்டிபூசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்