முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சீமான் தங்கபாலுவை எதிர்த்து இன்று பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.3 - காங்கிரசுக்கு எதிராக சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பிரச்சாரம் செய்கிறார். 5 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரசை எதிர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரசின் வீழ்ச்சி- தமிழ் இனத்தின் எழுச்சி, காங்கிரசின் தோல்வி- நாம் தமிழரின் வெற்றி என்ற முழக்கத்தை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புலித்தேவன் பிறந்த ஊரான  திசையன்விளையில் கடந்த மாதம் 25-ந் தேதி எழுச்சி பிரச்சார பயணத்தை சீமான் தொடங்கினார்.  நாம் தமிழராய் உருவெடுப்போம்- காங்கிரசை கருவறுப்போம் என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் தொடங்கி உள்ள சீமான், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு எதிராக தனது சூறாவளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

சிவகங்கை, மதுரை, தஞ்சை, நாகர்கோவில், திருத்துறைபூண்டி உட்பட பல்வேறு தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த சீமான், சென்னையில் இன்று பிரச்சாரம் செய்கிறார். இன்று காலை 9 மணிக்கு சென்னை அண்ணாநகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். இதன் பின்னர்  11 மணிக்கு மயிலை மாங்கொல்லையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிராக பேசுகிறார். இதையடுத்து பகல் 2 மணிக்கு ராயபுரம் சோலையப்பன் தெருவில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். இதன் பின்னர் மாலை 5 மணிக்கு திரு.வி.க.நகர் தொகுதியில் பெரவள்ளூர் சந்திப்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் காங்கிரசை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்கிறார். 

மாலை 7 மணிக்கு தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட முத்துரங்கன் சாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிராக பேசுகிறார். தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரசை எதிர்த்து சூறாவளி பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக வருகிற  11-ந் தேதி ஆவடியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். சீமானின் இந்த  சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது.  

ஏற்கனவே கோஷ்டிபூசல், வேட்பாளர் பிரச்சினை என்று தள்ளாடி கொண்டிருக்கும் காங்கிரசுக்கு  தமிழர் பிரச்சினை பற்றி சீமானின் அனல் பறக்கும் பேச்சு மேலும் சம்மட்டி அடி கொடுக்கும் என்பது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony