முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் ஆதாரங்களை வெளியிட்ட அன்னா குழுவினர்

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 28 - டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத்தை துவங்கிய அன்னா குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிரான ஊழல் ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கு எதிராகவும் ஊழல் ஆவணங்களை வெளியிட்டுள்ளனர்.

அன்னா குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக வெளியிட்டுள்ள ஆவணத்தில் கூறியிருப்பதாவது,

கடந்த 2004 ம் ஆண்டு மே மாதம் முதல் மன்மோகன் சிங் பிரதமராக உள்ளார். அதிலும் 2006 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2009 ம் ஆண்டு மே மாதம் வரை நிலக்கரி அமைச்சகம் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மூலம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ்ஈட்டியுள்ளது சி.ஏ.ஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 3 முதல் 4 நிலக்கரி கிடைக்குமிடங்கள் தான் ஒதுக்க வேண்டும். ஆனால் 2006-2009ல் 22 முதல் 24 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங்கின் கட்டுப்பாட்டில் நிலக்கரி துறை இருந்த போது இது எப்படி நடந்தது என்ற கேள்வி எழுகிறது. அதுவும் அந்த ஒதுக்கீடுகள் ரகசியமாக நடந்துள்ளன.

முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி அன்று நிலக்கரி கிடைக்குமிடங்களை ஏலத்தின் மூலம் ஒதுக்கும் திட்டத்தை நிலக்கரி செயலாளர் நிலக்கரி இணையமைச்சருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த திட்டத்தில் சில குளறுபடிகள் இருப்பதாக கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இது அர்த்தமில்லாத குற்றசாட்டு என்று நிலக்கரி செயலாளர் தெரிவித்திருந்தார். ஆனால் 2004 ம் ஆண்டு செப்டம்பர் மாதமே ஏலம் மூலம் நிலக்கரி பிளாக்கை ஒதுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு வழியாக இந்த திட்டத்தை ஏற்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கனிமங்களும் ஏலத்தின் மூலம் ஒதுக்குவது என்று 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா 2008 ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2010 ம் ஆண்டு ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே 2005 ம் ஆண்டு 24 நிலக்கரி கிடைக்குமிடங்கள், 2006 ல் 53 இடங்கள், 2007 ல் 52 இடங்கள், 2008 ல் 24 இடங்கள் மற்றும் 2009 ல் 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒதுக்கியதால் பல லட்ச கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மன்மோகன் சிங் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளன. அதனால் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்