முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா படக்காட்சியும் - தி.மு.க.வினர் மனசாட்சியும்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 - சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தகராறுகள் ஆரம்பித்து தொகுதி தகராறுகள் வரை தி.மு.க. கூட்டணியினரின் குதிரைகள் நொண்டிக்கொண்டே ஓடுகிறது. காங்கிரஸ் குதிரை கோஷ்டி சண்டை என்னும் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு ஓடுகிறது.

எந்த தொகுதியிலும் தி.மு.க.வினர் காங்கிரசார் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வதில்லை தி.மு.க.விலும் காங்கிரசிலும் மக்களை சந்திக்கும் கவர்ச்சிகர தலைவர்கள் இல்லை. கருணாநிதிக்கு கூட்டம் குறைவாக கூடுகிறது. வி.ஐ.பி. விஜயகாந்தின் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தாங்க முடியாதவர்கள் காமெடி நடிகர் வடிவேலுவை அழைத்து வந்து காமெடி பண்ணுகிற நிலையை காணமுடிகிறது.

இந்நிலையில் கருத்துக்கணிப்புகள் மக்கள் எண்ணங்கள் தமது கூட்டணிக்கு எதிராக இருப்பதால் மிரண்டுபோன தி.மு.க.வினர் தனது குடும்ப தொலைக்காட்சியிலும்,  தாத்தா தொலைக்காட்சியிலும் சித்து வேல செய்து மக்களை குழப்பும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.

கொல்றாங்களே, கொல்றாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுத்த குடும்ப தொலைக்காட்சியின் வியாதி தாத்தா தொலைக்காட்சிக்கும் வந்து விட்டது. விஜயகாந்தின் பிரச்சார தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் மைக் கீழே விழுந்தமைக்காக தோளில் தட்டி தனது உதவியாளரை எடுக்கச் சொன்ன விஜயகாந்தின் அத்தகைய காட்சியை அருகருகே ஒட்டவைத்து திரும்ப அந்த நபரை விஜயகாந்த் அடிப்பதுபோல் காண்பித்து அதற்கு டப்பிங் சவுண்டும் கொடுத்து ஒளிபரப்பினர் அடிப்பட்டவரை வேட்பாளர் என்றனர். ஆனால் அந்த காட்சியில் வருபவருக்கு தலையில் முடி கிடையாது. தர்மபுரி வேட்பாளர் தலையெல்லாம் முடி உள்ளவர்.

இதேபோல் தான் பேசும்போது முகத்தை மறைக்கும் கொடியை விஜயகாந்த் இறக்க சொல்லும் காட்சியை காட்டி அ.தி.மு.க. கொடியையும் காட்டி சிண்டு முடியும் வேலையில் இரண்டு தொலைக்காட்சிகளும் இறங்கி உள்ளன.

இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள் கண்டு கொல்ளாத ஜெயலலிதா என்று தாத்தா தொலைக்காட்சி திரும்ப திரும்ப நேற்று ஒளிபரப்பியது.

அதில் ஜெயலலிதா பேசும் கூட்டத்தில் பெண்கள் அதிகம் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுகின்றனர் போலீசார் அவர்களை தூக்கி விடுகின்றனர். இதை வைத்து பெண்கள் மயங்கினர். ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை என்றும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் ஒளிபரப்புகின்றனர்.

இந்த பொய் செய்தி ஒளிபரப்பான போது பழைய ஞாபகங்கள் வந்தது. தி.மு.க.வினர் ஏதோ மனசாட்சி உள்ளவர்கள் போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களுடைய மனசாட்சி சாம்பிளுக்கு சில விஷயங்கள் கடந்த ஆண்டு சுகாதார துறை மந்திரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகின்றனர். வழியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடக்கிறார். அவரை பார்த்து வண்டியை நிறுத்திய அமைச்சர்  மற்றும் உடன் சென்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். உயிருக்கு போராடிய எஸ்.ஐ. தண்ணீர் கேட்டபோது தண்ணீர்கூட கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமைச்சர் நின்றார். வெட்டுபட்டவரை உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி உடனே சிகிச்சை அளித்திருந்தால் ஒரு காவல் அதிகாரியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் மனசாட்சி உள்ள தி.மு.க. அமைச்சர் அல்லவா? அதனால் அதிகாரி சாவதை வேடிக்கை பார்த்தபடி நின்றார். இந்த காட்சியை பார்த்து உலகமே வேதனைபட்டது.

இதேபோல் அமைச்சர் மைதீன் கான் கார் ஒரு பாதசாரி மீது மோதிவிட்டு விபத்தில் சிக்கியவவை காப்பாற்ற கூட முயற்சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதெல்லாம் தி.மு.க.வினரின் மனசாட்சிக்கு சில சான்றுகள் சொந்த காட்சியின் அமைச்சரையே கொன்றதாக அழகிரி மேல் குற்றசாட்டு கூறப்பட்டது.

சில பெண்கள் மயங்கி விழுந்ததை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லையாம் அவருக்கு மனசாட்சி இல்லையாம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி வள்ளலார் போல் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர். 539 தமிழக மீனவர்களை துள்ள துடிக்க சண்டைக்காய் நாடு இலங்கை ராணுவத்தினர் கொன்றபோது கடிதம் எழுதுகிறேன் என்று பாவ்லா காட்டியவர். அப்பொழுது கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா? 539 தமிழக மீனவ பெண்கள் விதவை ஆனதை வேடிக்கை பார்த்தது மனசாட்சி உள்ள செயலா?

ஜெயலலிதா தி.மு.க. கட்சியினரையும், அரவணைத்து உதவியவர் கருணாநிதி சொந்த கட்சிக்காரனுக்கு கூட உதவாதவர். தி.முக.. விசுவாசியாக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் தனது சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோது கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தபோது உரிய சிகிச்சை அளித்து உதவியதால் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.எஸ்.சந்திரன் கடைசிவரை அந்த நன்றியை மறக்காமல் இருந்தார். இதேபோல் தி.மு.க. மேடை பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இக்கட்டான குடும்ப பிரச்சனை கராணமாக கருணாநிதியிடம் உதவி கேட்க நானே கஷ்டப்படுகிறேன். இதில் உனக்கு எங்கு நான் பணம் தர என்று கூறியதாக கூறப்பட்டது. பின்பு ஜெயலலிதாவிடம் தீப்பொறி ஆறுமுகம் உதவி கேட்டபோது வேண்டிய பணத்தை கொடுத்து புது கார் ஒன்றையும் ஜெயலலிதா தீப்பொறி ஆறுமுகத்திற்கு கொடுத்தார். இதுபோல் பல விஷயங்கள் சொல்லலாம். பண வசதி இல்லாமல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த அவரது மகன் மு.க.முத்து உதவி கேட்டுபோனபோது அவருக்கு ரூ.5 லட்சம் உதவி செய்தவர் ஜெயலலிதா.

குடும்ப தொலைக்காட்சிக்கும், தாத்தா தொலைக்காட்சிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதால் பொய்யான விஷயங்களை உண்மையாக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். என்ன ஜகஜ்ஜால வேலை செய்தாலும் பிரச்சினைகள் தான் மக்களை சிந்திக்க வைக்கும். அதுதான் இந்த  ஆட்சிக்கு முடிவுரையும் எழுதும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony