முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் கலவர பகுதிகளை மன்மோகன்சிங் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜூலை. 29 - அசாம் மாநிலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் நேரில் விசாரித்து ஆறுதல் கூறினார். அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் திடீரென இனக் கலவரம் வெடித்தது. குறிப்பாக, கோக்ராஜ்ஹர் மாவட்டம் இந்த கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அசாம் கலவரத்தில் இதுவரை சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். கலவரத்தை அடக்க போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கவுகாத்தி வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில கவர்னர் ஜே.பி.பட்நாயக், முதல்வர் தருண்கோகோய் மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். 

கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து கோக்ராஜ்ஹர் மாவட்டத்திற்கு ஒரு ஹெலிகாப்டரில் மன்மோகன்சிங் புறப்பட்டு சென்றார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் மீண்டும் கவுகாத்திக்கே திரும்பி வந்தது. பிறகு இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றொரு ஹெலிகாப்டரில் அவர் கோக்ராஜ்ஹர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இரண்டு நிவாரண முகாம்களுக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்ததை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அவர் அப்போது உறுதியளித்தார். பிறகு அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கவுகாத்தி வந்து சேர்ந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்