முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் 41 ஆண்டுகள் சேவைசெய்த யானை அவ்வை

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஆக.- 2 - திருப்பரங்குன்றம் கோயிலில் 41 ஆண்டுகள் முருகப்பெருமானுக்கு சேவை செய்த யானை அவ்வையின் மறைவால் திருப்பரங்குன்றமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முருகப்பெருமானின் முதல்படை வீடு என்ற சிறப்புப்பெற்ற திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் 1971-ம் ஆண்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து வந்தது யானை அவ்வை. இதற்கு முன்பு வள்ளி, தெய்வானை என இரு யானைகள் இருந்து மறைந்தன. அதனால் முருகனுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்த மூதாட்டி அவ்வையின் பெயர் வைக்கப்பட்டது. அந்த அவ்வையின் பெயரைப் பெற்றதாலோ என்னவோ கோயில் யானை அவ்வையும் மிகுந்த பொறுமையுடன் முருகக்கடவுளுக்கு 41 ஆண்டுகள் சேவை செய்தது. தினம் அதிகாலையில் சரணவபொய்கை சென்று அங்கிருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் கொண்டு வந்து கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும். சுவாமி புறப்பாடுகளின் போது யானை அவ்வை முன்செல்லும். திருவிழாக்காலங்களில் சுவாமியோடு திருவீதி உலாவிலும், தேரோட்டங்களில் தேரின் முன்பும் அவ்வை கம்பீரமாக முன் செல்லும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், புட்டுத்திருவிழாவிற்கு திருப்பரங்குன்றம் சுவாமிகளுடன் அவ்வை முன் சென்று திரும்பும். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அவ்வையின் பாசம் கொண்டனர். ஏனென்றால் அவ்வை பொறுமையின் சிகரமாக இருந்து வந்ததுதான். திருவிஆழாக்காலங்களில் சிறுவர்கள் பயமின்றி யானை அவ்வையை தொட்டு வணங்குவர். அதனை ஆமோதிக்கும் வகையில் அவ்வை அமைதியாக இருக்கும். திருவிழாவில் வெடி வெடித்தாலும், மேளதாளம் வாசித்தாலும் இவற்றை கண்டுகொள்ளாமல் அமைதியாக வும் பொறுமையுடனும் நடந்து செல்லும். மற்ற யானைகளாக இருந்தால் மிரளும், பிளிரும், சிறுவர்களை விரட்டும். ஆனால் அவ்வை மிகுந்த பொறுமையுடன் நடந்து கொள்ளும்.  திருவிஆழாக்காலங்களில் வெளியில் செல்லும் போது அவ்வையின் நடை வேகமாக இருக்கும். ஆனால் திருவீதி உலாவின் போதும், தேரோட்டத்தின் போதும் மிக மிக மெதுவாக நடந்து செல்லும்.  எப்போதும் எந்த கால கட்டத்திலும் அவ்வை யாருக்கும் எள்ளளவு கூட தொந்தரவு கொடுத்ததில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும் படுத்த படுக்கைக்கு செல்லவில்லை. தொடர்ந்து நடமாடிக்கொண்டே இருந்தது. இறக்கும் வரையில் நடமாடிக்கொண்டிருந்தது. இறந்த தினத்தன்று நின்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஒரே நொடியில் கீழே விழுந்து இறந்தது. 41 ஆண்டுகள் முருகபெருமானுக்கு சேவை செய்த அவ்வை தற்போது அவரது திருவடிகளை சென்றடைந்து விட்டது. அவ்வை நின்ற இடம் தற்போது வெறிச்சோடிக்கிடக்கிறது. அவ்வையின் இடத்தை நிரப்புவதற்கு வேறு யானையால் முடியுமா என்பதற்கு எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எது எப்படியிருந்தாலும் அவ்வையின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். மனித தெய்வம் எம்.ஜி.ஆர். நல்ல நேரம் படத்தில் ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும், ஆடிப்பாடி மகிழனும், அன்பை நாளும் வளர்க்கனும் என்று யானைகளை வைத்து பாடினார். அதற்கு உதாரணமாக அவ்வை 41 ஆண்டுகள் ஓடிஓடி உழைத்து ஊரையெல்லாம் மகிழ்வித்து அனைவரது அன்பையும் பெற்ற அவ்வையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்