முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் பள்ளி தீவிபத்து: 6 மாதத்தில் தீர்ப்பளிக்க உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. - 5 - கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு பரிசீலித்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, கும்பகோணத்தில் 1999 ம் ஆண்டு ஜனவரி முதல் 2009 ம் ஆண்டு ஜூன் மாதம வரை மாவட்ட உதவி கல்வி அதிகாரியாக பாலகிருஷ்ணன் பணியாற்றினார். ஆனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு 2004 ம் ஆண்டில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் எனது கட்சிக்காரரின் பெயரை சேர்த்தது தவறு. அதனால் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து பாலகிருஷ்ணனை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.  இதையடுத்து நீதிபதிகள், தீ விபத்து ஏற்பட்ட காலத்தில் மனுதாரர் வேறு இடத்துக்கு மாற்றலாகி இருந்தாலும் சம்பவம் நடந்த கும்பகோணத்தில் பணியாற்றிய போது பள்ளியில் சோதனை நடத்தக் கூடிய பொறுப்பு அவருக்குத்தான் இருந்துள்ளது. அதனால்தான் அவர் மீது அரசு தரப்பு வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அவர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  இந்த வழக்கு 2004 ம் ஆண்டு முதல் விசாரிக்கப்படுவது கவலையளிக்கிறது. இது போன்ற வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி முடித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். அதனால் ஆறு மாதத்திற்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.  கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 மாணவர்கள் உடல் கருகி பலியாயினர். இதையடுத்து கும்பகோணம் நகராட்சி ஆணையர், திட்ட அதிகாரி, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிகள் உட்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் தலைமை கல்வி அதிகாரி, அப்போதைய வட்டாட்சியர், முன்னாள் ஆரம்பப் பள்ளி இயக்குனர் உள்ளிட்ட 7 பேரை தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றம் விடுவித்தது.  இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தனியார் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 பேரும் தங்களை விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து வழக்கில் இருந்து விடுதலை செய்ய தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்