முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏதும்இல்லை

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

ஆக்ரா, ஆக. - 6 - பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.  பாராளுமன்ற தேர்தல் 2014 ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் போது பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பும் உள்ளது, ஆதரவும் உள்ளது. இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பாரதீய ஜனதா கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அல்லது கருத்து வேறுபாடும் இல்லை என்று பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வேட்பாளர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 2014 ல் நடக்கவுள்ள பொதுத் தேர்தலின் போது நிறுத்தப்படவுள்ள பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் தே.ஜ. கூட்டணி கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். இந்த விஷயத்தில் எந்த பிளவும் இல்லை என்று கூறிய அவர், கூட்டணிகளுக்குள் கலந்து பேசி கூட்டாக இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மற்றபடி பா.ஜ.க.வில் கருத்து வேறுபாடு இல்லை. உள்கட்சி பூசலும் இல்லை. அந்த கேள்விக்கே இடமில்லை என்று கூறிய அவர், யாருடைய தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது என்பதை பா.ஜ.க.வும், தே.ஜ. கூட்டணியும் இணைந்து முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். அதே வேளையில் 2014 பொதுத் தேர்தலின் போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட கூடாது என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க மேலிடத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒரு உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த மாதம் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்ற சமயத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் கட்காரியை நிதீஷ்குமார் சந்தித்தார். அப்போதுதான் அவர் நரேந்திர மோடியை நிறுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதாக நிதீஷ்குமாரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பிரச்சினை இல்லை என்று பா.ஜ.க மேலிடம் கூறுகிறது. ஆனால் நிதீஷ்குமாரோ இப்போதே பிரச்சினையை எழுப்ப தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்