முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தில் பல பிரச்சனைகளை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இன்று துவங்கும் பாராளுமன்ற கூட்டம் செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும். அப்போது 31 மசோதாக்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அஸ்ஸாம் கலவரம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, நாட்டின் ஒரு பக்கம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு குறித்து மக்களவை சபாநாயகர் மீராகுமார் டெல்லியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அரசு தரப்பில் சுசில்குமார் ஷிண்டே, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், கம்யூனிஸ்ட் சார்பில் குருதாஸ் தாஸ்குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் பணவீக்கம், அஸ்ஸாம் பிரச்சனை, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு போன்ற பிரச்சனைகள் குறித்து பேசினர். இதற்கு பாராளுமன்றத்தில் மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நிலக்கரி சுரங்க விவகாரத்தை முன்னிறுத்தி பிரதமரை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளில் எதிர்கட்சிகள் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நிலக்கரி இலாகாவை பிரதமர் மன்மோகன்சிங் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது 60-க்கும் மேற்பட்ட நிலக்கரி படிவங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்ததாக தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமரை தனிமைப்படுத்த எதிர்கட்சிகள் முயலும். அதே சமயத்தில் பழியை எதிர்கட்சிகள் மீதே சுமத்த காங்கிரசும் தயாராகி வருகிறது. இந்த ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்த 4 முக்கிய மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஆட்சியில் இருந்தன. குறிப்பாக ஒடிசாவில் பிஜூ ஜனதாதளமும், மேற்கு வங்கத்தின் இடதுசாரி கட்சிகளும் சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பா.ஜ.க.வும் ஆட்சியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில் இக்கட்டான நேரம் என்ற போதிலும் சபையை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவோம். பொதுநலம் கருதி எதிர்கட்சிகள் எந்த பிரச்சனையையும் எழுப்புவது அவர்களது உரிமை. இதுகுறித்து சபையில் விவாதிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றார். நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணைக்கு உட்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அடுத்தவாரம் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது. தற்போது எதிர்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 4 மாநிலங்களில் மட்டும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்