முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரி அமோக வெற்றி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.8 - துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரி அமோக வெற்றிபெற்றுள்ளார். மீண்டும் துணை ஜனாதிபதியாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் தோல்வி அடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்று நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். அதனையடுத்து துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்தவிட்டால் புதிய துணைஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக தற்போது துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியே போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டார். அவருக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்தது. பிஜூஜனதாதளம் தேர்தலை புறக்கணித்துவிட்டது.  நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓட்டுப்பதிவு தொடங்கி பிற்பகல் 1 மணிக்குள் 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டுவிட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்,லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஆகியோரும் முன்கூட்டியே வந்து ஓட்டளித்தனர்.  ஜனாதிபதி தேர்தலை போல் அல்லாமல் துணைஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிவடைந்த உடனே ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பாராளுமன்ற லோக்சபை, ராஜ்யசபை உறுப்பினர்கள் மட்டும் ஓட்டு அளித்திருந்தனர். லோக்சபையில் 543 எம்.பி.க்களும், ராஜ்யசபையில் 245 எம்.பி.க்களும் உள்ளனர். அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபையில் 204 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 71 எம்.பி.க்களும் உள்ளனர். திரிணாமூல் காங்கிரசுக்கு லோக்சபையில் 19 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 9 எம்.பி.க்களும் உள்ளன. தி.மு.க. வுக்கு லோக்சபையில் 18 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 7 எம்.பி.க்களும் தேசியவாத காங்கிரசுக்கு லோக்சபையில் 9-ம் ராஜ்யசபையில் 7 எம்.பி.க்களும் உள்ளனர். லல்லு கட்சிக்கு லோக்சபையில் 5 எம்.பி.க்களும்,தேசிய மாநாடு கட்சிக்கு லோக்சபையில் 3-ம் ராஜ்யசபையில் 2 எம்.பி.க்களும் உள்ளனர். மேலும் அன்சாரிக்கு சமாஜ்வாடியை கட்சியை சேர்ந்த லோக்சபை எம்.பி.க்கள் 22 பேர், ராஜ்யசபை எம்.பி.க்கள் 9, பகுஜன்சமாஜ் கட்சியே சேர்ந்த லோக்சபை எம்.பி.க்கள் 21, ராஜ்யசபை எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவும் உண்டு. மேலும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்களும் அன்சாரிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.   துணைஜனாதிபதி தேர்தலை பிஜு ஜனதாதளம், தெலுங்குதேசம் மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன. ஜஸ்வந்த் சிங்கிற்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதைத்தவிரி அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்தது. 

நேற்றுக்காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 736 எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டிருந்தனர். இதில் 490 எம்.பி.க்கள் அன்சாரிக்கும் ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டிருந்தனர். அன்சாரி 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தர் அதிகாரி டி.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். மீண்டும் துணைஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்சாரி வருகின்ற 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அன்சாரிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். 

75 வயதாகும் அன்சாரி பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் தலைவராக பதவி வகித்தவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தூதராக பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்