முக்கிய செய்திகள்

கருணாநிதி குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
udhaya

 

மதுரை,பிப்.21 - கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகத்தை பிடித்துள்ள தோஷம் விலகும் என்று மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசினார்.

  மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ஸ்பெக்ட்ரம் ஊழலில்  தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரியும் மதுரை முனிச்சாலை கிழக்கு மண்டலஅலுவலகம் அருகே அ.தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்து பேசினார்.  மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து தலைமை வகித்தார்.இதில் அ.தி.மு.க, மார்க்சியகம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ம.தி.முக. மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில்   கலந்து கொண்டு அ.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது,

   தமிழகத்தில் தற்போது அவல ஆட்சி நடந்து வருகிறது. மதுரை மாநகராட்சியை எடுத்துக்கொண்டால் நிர்வாக சீர்கேடு, ஊழல் போன்றவற்றால் சீரழிந்து உள்ளது. இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டு இருப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகும். இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் அனவைரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா தினமும் போர்க்குரல் எழுப்பி வருகிறார். முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இதில் குற்றவாளிகளாக இருக்கும் நீராராடியா, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரின் கைது எப்பொழுது என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள். திடீரென்று முக்கிய செய்தியாக கனிமொழி கைது என்று செய்தி வந்தது. உற்று நோக்கியபோது மீனவர்களின் கைதுக்காக கனிமொழி போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, கருணாநிதி அதை மறுத்து கைது செய்து மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

     ஒரு சாண் வயிற்றுப்பிழைப்புக்காக ஆழ் கடலுக்குள் சென்று திரும்பும் அவர்களை ஒரு புறம் சுட்டும், மறுபுறம்கைது செய்தும் வருகிறது சிங்கள அரசு. அந்த அப்பாவி மீனவர்களை ஏமாற்றும் வகையில் கருணாநிதியும், அவரது மகள் கனிமொழியும் மிகப்பெரிய ஏமாற்றுவேலையை நடத்தி நாடகமாடி கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவென்றால் கனிமொழி கைதாகும் தோஷம் உள்ளது என்று கருணாநிதியிடம் ஜோதிடர்கள்  கூறியதின் அடிப்படையில் கனிமொழியை கைது செய்து அந்த தோஷத்தை கழித்து உள்ளாராம். அப்படிப்பட்ட சுயநலவாதி குடும்பம்  இந்த ஆட்சியை விட்டு ஒழிந்தால் தான் இந்த நாட்டுக்கு பிடித்த தோஷம் விலகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருந்தது. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரிகேடு, விலைவாசி உயர்வு, ஊழல், மீனவர் பிரச்சினை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது. மீனவர் பிரச்சினைக்கு காரணம்  அன்று கருணாநிதி தன் சுயநலத்திற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தததுதான். தற்போது ஊழல் வழக்கிற்காக தமிழ்நாட்டை கருணாநிதி காவு கொடுத்து கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மக்கள் கருணாநிதிக்கு பதிலடியாக வருகிற சட்ட மன்ற தேர்தலில் தோல்வியை தந்து பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த தொடர் முழக்க போராட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்  மன்ற செயலாளர் ஜெயபால், ஜெயலலிதா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி,  மார்க்சியகம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: