முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் என்னத்த கண்ணையா மறைந்தார்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.9  - பழம்பெரும் நடிகர் என்னத்த கண்ணையா உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். சென்னை லாயிட்ஸ் காலனியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். 

எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, தனுஷ், விஷால் உட்பட தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர் 1924 ல் மதுரையில் பிறந்தார். டி.கே. சண்முகம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோரது நாடக குழுக்களில் இணைந்து 1942 ல் கலை பயணத்தை தொடங்கிய கண்ணையா, 1950 ல் ஏழை படும்பாடு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 

ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த நான் திரைப்படத்தில் கண்ணையா பேசிய என்னத்த என்ற வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகே அவர் என்னத்த கண்ணையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருடன் ஒளிவிளக்கு, கண்ணன் என் காதலன், பாசம் உள்ளிட்ட படங்களிலும், சிவாஜியுடன் சொர்க்கம், வீரபாண்டியன், மருமகள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் ஊர்க்காவலன், மன்னன், சிவா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த என்னத்த கண்ணையா, பி. வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த வரும் ஆனால் வராது என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. தனுஷ்சுடன் படிக்காதவன், அருண் விஜய் உடன் தவம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் இறுதியாக விஷாலுடன் வெடி திரைப்படத்தில் நடித்தார். மறைந்த கண்ணையாவுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜம் 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்