முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: முதல்வர் வாழ்த்து

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடெங்கும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். கோகுல கண்ணனின் அவதார திருநாள் இன்று (வியாழக் கிழமை) நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசின் அனைத்துத் துறைகளும், வங்கிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன. தமிழக அரசும் இத்திருநாளை முன்னிட்டு விடுமுறை விடுத்துள்ளது. அரசு துறைகள், பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்துத் துறைகளுக்கும் தமிழக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கண்ணபிரான் அவதரித்த இத்திருநாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி  என்றும் கோகுலாஷ்டமி என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன் என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் ஒவ்வொருவரும், அறத்தை போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், குழந்தைகளின் மாவினால் ஆன காலடிகளை இல்லங்கள் தோறும் பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள்.  இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்