முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி தலைவர் ஜேப்பியார் மற்றும் மருமகன் கைது

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

காஞ்சிபுரம், ஆக.10 -​ காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் ஜேப்பியாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் ஜேப்பியார் கல்வி நிலையங்களில் ஒன்றான ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற என்ஜீனியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில் வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்பாக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் உள்ள ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியை பிரபல கல்வியாளர் ஜேப்பியார், அவரது மருமகன் மரியவில்சன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடம் கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவது குறித்து குன்னம் உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறவில்லை. உள்விளையாட்டு அரங்கம் கட்டுவது குறித்து உரிய முறையில் தேர்ச்சிப் பெற்ற கட்டிட அமைப்பு இன்ஜினியரிடம் வரைபடம் எதுவும் பெறப்படவில்லை. முன் அனுபவம் இல்லாத தங்களது கல்லூரியில் படித்த ஒரு சில இன்ஜினியர்களை பணிக்கு அமர்த்தியும், வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வந்த கட்டுமான பணியில் அனுபவமில்லாத நபர்களை ஏஜென்ட்டுகள் மூலம் பணிக்கு அமர்த்தியும் கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளனர். மேலும் ஸ்திர தன்மைக்கு (பலம்) குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதும், ஸ்திர தன்மைக்குத் தேவையான கால அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து கட்டுமான பணியை விரைந்து முடிக்க முயன்றதாலும் இந்த சம்பவம் நடந்து பல உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் விசாரணையில் வடமாநிலத்தவர்களை ஏஜென்டுகள் மூலம் குறைந்த கூலிக்கு பணிக்கு அமர்த்தியும், பணியாளர்களின் தினக்கூலியிலிருந்து கணிசமான தொகையை கமிஷனாக பெறப்படுவதும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 6.8.2012 அன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. பிறகு சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து சின்னா பின்னமானது. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் கதறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். அப்போது அசாம் மாநிலம் காசியாலா பகுதியைச் சேர்ந்த தப்பா (25), மிந்து (30), ஒடிஷா மாநிலம் பந்தாலா பகுதியைச் சேர்ந்த முந்து (25), சங்கர் (25), பாகுலு (30), புகாலிபீடா பகுதியைச் சேர்ந்த பிஸ்வாம்பத்ரா (30) உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து பிணமாக கிடந்தனர். அவர்களுடைய பிணங்களை போலீசார் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (20), சத்ருகான் (38), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரங்காய் (24), கஸ்பர் மகன் பைசால் (28), நரேன், வினோத் ஆகிய 6 பேரை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாகர், சத்ருகான், ரங்காய் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பைசால், நரேன், வினோத் ஆகிய 3 பேர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஸ்பர் மகன் பைசால் (28) என்பவர் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி கடந்த 7-​ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதனைத்        தொடர்ந்து கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10​ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மேலும் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இத்துயர சம்பவத்திற்கு காரணமான ஜேப்பியார் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் இயக்குநரும், ஜேப்பியாரின் மருமகனுமான மரியவில்சன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டுமான இன்ஜினியர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த அருள் ஜெயஅப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்த ஏஜென்ட் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பிறகு இவர்கள் 4 பேரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

கட்டிடம் கட்ட உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து உரிய முன் அனுமதி பெறாமலும், அனுபவம் உள்ள தேர்ந்த என்ஜினியர்களை வைத்து கட்டிடம் கட்டாமலும், கட்டிடம் கட்டும் இடத்தின் மண் பரிசோதனையை செய்யாமலும், ஸ்திர தன்மையுள்ள கட்டுமான பொருட்களை பயன்படுத்தாதனாலும், கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும் போதுமான கால அவகாசம் அளிக்காததாலும், அவசர அவசரமாக இந்த பெரிய கட்டுமான பணியை அலட்சியமாக கல்லூரி நிர்வாகம் செய்ததனால்தான் இந்த பெரிய விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு போலீஸ் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரியின் தலைவரும், பிரபல கல்வியாளருமான ஜேப்பியாரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் துணை சூப்பிரண்டு ஆர்.கஜேந்திரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மோகனவேல், சவுந்தரராஜன், சப்-​இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில் ஜேப்பியாரை தீவிரமாக தேடி வந்தனர்.

ஜேப்பியாரின் வீடுகள், கல்வி நிலையங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை, விமான நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் சல்லடைபோட்டு ஜேப்பியாரை தேடினர். இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள ராமச்சந்திரா நீரிழிவு மருத்துவமனையில் ஜேப்பியார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஜேப்பியாரிடம் கல்லூரி உள்விளையாட்டு அரங்க கட்டிடம் இடிந்து வடமாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பலியான வழக்கில் உங்களை கைது செய்கிறோம் என்று போலீசார் கூறி அவரை திடீரென கைது செய்தனர்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட் அப்துல்மாலிக் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வந்த சென்னை மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு விசாரணை நடத்திய அவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜேப்பியாரை வருகிற 22​-ந்தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஜேப்பியார் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அழைத்து செல்லாமல் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட பிரபல கல்வியாளர் ஜேப்பியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 304 ற 2 (அசம்பாவிதம் அல்லது கொலையாகாத மரணம்), 308 (அதிக காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் தலைவரும், பிரபல கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார், அவரது மருமகனும், கல்லூரியின் இயக்குநருமான மரியவில்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்