மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக. 10 - இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையின் வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தலைவர் வரதராஜ பெருமாளை டெல்லியில் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் வட கிழக்கு மாகாண சபை இருந்த போது அதன் முதல்வராக வரதராஜ பெருமாள் 1988 - 90 ஆண்டுகளில் இருந்தார். இலங்கையில் இருந்து இந்திய அமைதி படை விலக்கி கொள்ளப்பட்ட பிறகு அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்தார். 

டெல்லியில் அவர் சர்வோதயா என்கிளேவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவரது வசிப்பிடத்தை அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் டெல்லி போலீசின் 25 பாதுகாவலர்கள் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். வரதராஜ பெருமாள் வசித்து வந்த குடியிருப்பின் முன்பாக இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை அவர்கள் ஆக்கிரமித்து கூடாரம் அமைத்தனர். அது மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் வசித்து வருவதால் அந்த பூங்காவில் பொதுமக்கள் வருவதற்கும் அவர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். 

இந்த நிலையில் பாதுகாவலர்களின் நெருக்கடி தொடர்ந்ததால் அதிருப்தி அடைந்த சர்வோதயா என்கிளேவ் குடியிருப்பு நலச் சங்கத்தினர் டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தனர். வழக்கறிஞர் விகாஸ் பதோரா மூலம் தாக்கல் செய்த மனுவில், சட்ட விரோதமாக பூங்காவை ஆக்கிரமித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதால் பாதுகாவலர்களுடன் வரதராஜ பெருமாளை வேறு இடத்துக்கு மாற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சிக்ரி அது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: