படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே தேவை

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆக.- 13 - படிப்பில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்று முன்னாள் குடியரசு தலைவர் கூறினார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பில்லபாங் சர்வதேசப் பள்ளியில் கடந்த சனிக் கிழமை நடைபெற்ற நேருக்குநேர் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது, வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தை தேர்வு செய்து அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து இடைவிடாமல் கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்கும்போது எதிர்வரும் சிரமங்களையும், பிரச்சினைகளையும், சோதனைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற வேண்டும்.  ராமேஸ்வரத்தில் எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர், பறவை எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்பதை விளக்கிக் கூறி எனது படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவியதால் படிப்படியாக ஏவுகணை பொறியாளராக, விண்வெளித்துறை தொழில்நுட்ப பொறியாளராக உயர முடிந்தது. மற்றொரு ஆசிரியரான அய்யாதுரை சாலமோன், வாழ்க்கையில் முன்னேற லட்சியம், அதை அடைந்தே  தீருவேன் என்ற நம்பிக்கை, அந்த லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தி காட்டினார். பெரும்பாலான ஆசிரியர்களை போன்று அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மேலும் ஊக்குவிக்காமல், படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார்.  அவரை போன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற உதவ வேண்டும். மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தி, சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்றார். வேல்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ், கல்வி ஆலோசகர் ஆர்த்தி கணேஷ், டீன் வி.வெங்கடாசலம், பள்ளி முதல்வர் ஆர்.மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.        

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: