முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் அதிபர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 14 - மதுரை மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் அதிபர்கள் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைத்துப் பாக்கியும், பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் சிக்கின. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்ட விரோத மாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல புகார்கள் வந்ததன் அடிப்ப டையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, அதிகாரிகள் அடங்கிய 18 குழுக்களை அமைத்து மதுரை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற 174 கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதனடிப்படையில் இந்த குழுவினர் கடந்த 12 நாட்களாக குவாரிகளுக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் கிரானைட் குவாரிகளுக்கு நேற்று மூன்றாவது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குறிப்பாக கிரானைட் குவாரிகள் அதிகமாக உள்ள மேலூர் பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வினை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு, கண்மாய், ஊரணி, வாய்க்கால், வண்டிபாதை, தண்ணீர் வரத்து கால்வாய் போன்றவைகளைஅரசு அனுமதியின்றி தனியார் கிரானைட் நிறுவனத்தினர் உள்ளே புகுந்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்திருப்பதும், அதனை மண்ணை போட்டு மூடி தடயங்களை அழித்து இருப்பது உள்ளிட்ட ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் ஊழியர்கள் 36 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனனர்.  இதனால் கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் தங்களை போலீசார் கைது செய்யக்கூடும் என எண்ணி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு  தாக்கல் செய்த மனு  நேற்று விசாரணைக்கு வந்தது.  இதனை நீதிபதி வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார்.  இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மதுரை நகர் மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரி அதிபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார்  பல குழுக்கள“க சென்றுஅதிரடி சோதனை நடத்தினர். மதுரை அண்ணாநகரில் உள்ள பிஆர்பி வீட்டில் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது மகள் சிவரஞ்சனி வீட்டிலும், மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் உள்ள பிஆர்பியின் சகோதரியின் மகன்கள் வீடுகளிலும் போலீசார்  சோதனை நடத்தினர். மேலூரில் உள்ள பிஆர்பி கிரானைட் அலுவலகம், அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள், பிஆர்பி வழக்கறிஞர் லே”கநாதன் ஆகியோர் வீடுகளிலும், மதுரா கிரானைட் அதிபர் பன்னீர்முகமது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். பிஆர்பி வீட்டில் நடந்த சோதனையில்  ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை பீபிசாவடியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி எம்எல்ஏ பி.வி. கதிரவனின் மகன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை அள்ளி சென்றதாக தெரிகிறது. மேலூரில் உள்ள  பிஎஸ் கிரானைட் அதிபர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு கைத்துப்பாக்கியும், பயன்படுத்தப்பட்ட 10 தோட்டாக்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் பல்வேறு ஆவணங்களையும் போலீசார் எடுத்து சென்றதாக தெரிகிறது. மேலூரில் உள்ள பிஆர்பி கிரானைட்  நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்,   முன்னாள் கனிம வள உதவி இயக்குனர் சண்முகவேல் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு சண்முகவேல் ஒத்துழைப்பு தரமறுத்ததால் போலீசார் அவரை அழைத்து சென்று  கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிஆர்பி வழக்கறிஞர் லோகநாதன், ஒலிம்பஸ் கிரானைட் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோரையும் போலீசார் அழைத்து சென்று கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது, மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் பேரில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறோம். இதற்கிடையில் நேற்று காலை மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரி உரிமையாளர்கள் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 22 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 14 சப் இன்ஸ்பெக்டர்கள், 120 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையின்போது பல்வேறு  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்