முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினாத்தாள் அவுட் ஆனதால் குரூப்​2 தேர்வுரத்து: நட்ராஜ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 14 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் 3 ஆசிரியர்கள், தம்பதியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் தேர்வை ரத்து செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு அலுவலர், கூட்டுறவு தணிக்கை அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 3687 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப் 2 தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் 114 மையங்களில் 6.40 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வை 4 லட்சத்துக்கும் அதிகமான பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்​2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதாக வந்த தகவலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினார்கள்.தர்மபுரி மாவட்டத்தில் 43 மையங்களில் குரூப்​2 எழுத்து தேர்வு நடந்தது. தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி முத்தானூரை சேர்ந்த சுரேஷ்குமார், கம்பைநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்தார்.  தேர்வு தொடங்குவதற்கு முன்பே  அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதை தேர்வு கண்காணிப்பாளர் துணை தாசில்தார் கருப்பசாமி என்பவர் பார்த்தார். அவருக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் ஏராளமான ஜெராக்ஸ் பேப்பர்கள் இருந்தது. மேலும் விடைத்தாளும் இருந்தது. இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகம் வலுத்தது. . குரூப்​2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், வாலிபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விடைத்தாளும் ஒரே மாதிரியாக இருந்தது. இதையடுத்து துணை தாசில்தார் கருப்பசாமி இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் தயாராக இருந்தனர். தேர்வு முடிந்து வந்ததும் போலீசார் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா ஈட்டியம்பட்டி அருகே உள்ள எம்.தாதம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் சுரேஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. சுரேஷ் குமார் ரூ. 3 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்த தகவலையொட்டி மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர்
 அவரிடம் இந்த விடைத்தாள் எப்படி வந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் திருவண்ணாமலையில் நேற்று (முன்தினம்) இரவு ரூ. 50 ஆயிரம் கொடுத்து வாங்கினேன் என்றார். போலீசார் சுரேஷ் குமாரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு தானிபாடி என்ற பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை காட்டினார். போலீசார் விவேகானந் தனிடம் எப்படி உங்களுக்கு இந்த கேள்வித்தாள் கிடைத்தது என்று கேட்டனர். அதற்கு அவர் திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜ், குமார் ஆகியோரிடம் வாங்கினேன் என்றார். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
வினாத்தாள் நகல் விற்ற ரங்கராஜன் (40), விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். கைதான ரங்கராஜன், சுரேஷ்குமார் மற்றும் 2 பேரிடம்  தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் விசாரணை நடத்தினார்,. அப்போது இவர்கள் பெரிய நெட்வொர்க் அமைத்து பல பேருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வினாத்தாள் கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும் வினாத்தாள் வெளியானது தொடர்பாக கம்பை நல்லூர் போலீசார் சுரேஷ்குமார், விவேகானந்தன், அருண், ரங்கராஜ், குமார், nullபேஷ், ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஈரோட்டில் குரூப்​2 தேர்வு வினாத்தாளுடன் இருந்த ஒரு பெண்ணும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போது நாமக்கல் ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் இருந்து தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். பயிற்சி மைய நிர்வாகி ராசப்பன் என்பவரை அழைத்தும் விசாரித்தனர்.
ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மைய நிர்வாகி ராசப்பன் கடந்த 2002 முதல் 2005-​ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். மேலும் கடந்த ஆண்டு இறுதியில் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த போது, தமிழகம் முழுவதும் 42 பயிற்சி மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்திலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 தேர்வு ரத்து- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு: குரூப்​2 தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியே வந்தது? இதை வெளியிட்டது யார்? துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கட்ட விசாரணை முடிந்து தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையினை டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு அனுப்பினர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகார்களையடுத்து தேர்வை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, குரூப்​2 தேர்வை ரத்து செய்வதாக ஆர்.நட்ராஜ் அறிவித்தார். மேலும் இத்தேர்வை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து 10 நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்