முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்மரணம்:

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக. - 15 - கல்லீரல் புற்று நோய் காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் நேற்று மரணமடைந்தார். முன்னதாக நேற்று அவருக்கு நடைபெறவிருந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மூளைச் சாவு அடைந்த டிரைவர் ஒருவரின் கல்லீரலை எடுத்து தேஷ்முக்குப் பொருத்துவதாக இருந்த நிலையில் அந்த டிரைவர் மரணமடைந்ததால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தேஷ்முக் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. முழு கல்லீரலையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு கல்லீரலை தானமாக பெறும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 11 ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் 31 வயது டிரைவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச் சாவைச் சந்தித்தார். அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அவரது கல்லீரலை தேஷ்முக்குக்குப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டிரைவரின் குடும்பத்தினரும் சம்மதித்திருந்தனர். இதையடுத்து நேற்று காலையில் கல்லீரலைப் பெற்று தேஷ்முக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 12 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிரைவரின் கல்லீரலை எடுத்துச் செல்வதற்காக குளோபல் மருத்துவமனையின் ஆம்புலன்ஸும் பொது மருத்துவமனைக்கு வந்திருந்தது. ஆனால் டிரைவரின் குடும்பத்தினர் திடீரென பின்வாங்கி விட்டனர். மேலும் அதிகாலை இரண்டே முக்கால் மணியளவில் டிரைவரும் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதனால் அவரது கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உயிருடன் இருப்பவரின் கல்லீரலை மட்டுமே தானமாக பெற முடியும் என்பதால் தேஷ்முக்குக்கு டிரைவரின் கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், விலாஸ் ராவ் தேஷ்முக்குக்கு கல்லீரலைப் பெற்றுத் தர தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். டிவிட்டர் இணையதளம் மூலம் அவர் கோரிக்கையும் விடுத்திருந்தார். அத்தோடு நில்லாமல் குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவர் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனாலும் மோடியால் கல்லீரலைப் பெற்றுத் தர முடியவில்லை. இந்த நிலையில் விலாஸ்ராவ் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்தார். மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த 7ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். இரண்டு முறை மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ள இவரது மகன் தான் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக். ரிதேஷின் மனைவி தான் நடிகை ஜெனீலியா ஆவார். கல்லீரல் பிரச்சனையோடு விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்