முக்கிய செய்திகள்

கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை வளமாக்கும் பரப்பலாறு அணைக்கட்டு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஒட்டன்சத்திரம், ஆக.- 15 - திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு கீழாக நங்காச்சி ஆறு எனப் பெயர் பெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டனைக்கட்டு வரை சென்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருகிறது. இந்துக்களின் புனித தலமாக வடக்கே காசியின் தெய்வீகத்தையும் மகத்துவமும் இருப்பதால் பக்தர்கள் இதை ''நல்காசி ஆறு'' என்றே இன்னமும் அழைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பல கோவில்களுக்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் குலதெய்வம் உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கும் தீர்த்தாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். நல்காசி ஆறு எனப்படும் நங்காஞ்சியாறு காவேரி நதியின் கிளை நதியான அமராவதி ஆற்றின் உபநதியாகும். பரப்பலாற்றின் குறுக்கே தலையூத்துக்கு மேலே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் மலைப்பாதையில் அமைந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றினால் பயன்பெற்று வந்த 1373 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உறுதியான பாசன நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கூடுதலாக 1000 ஏக்கர் பாசன நிலங்களை கூடுதல் பயன் பெறுவதற்கும் பரப்பலாறு நீர்த்தேக்கத் திட்டம் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான தொகை செலவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது.

பரப்பலாறு நீர்த்தேக்கம் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது அணையின் சிறப்பு அம்சமாகும். அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர் ஆகும். ஆற்றின் ஒரு மடையின் அளவு அதாவது ஒரு கண் அளவு 1.52 மீட்டர் ஞ் 1.83 மீட்டர் அளவில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றப்படும் அணைப்பகுதியில் 3 கண்கள் 9.75 மீட்டர் ஞ் 4.57 மீட்டர் என்கிற அளவுகளில் வளைவு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மடையின் அடித்தளம் மட்டம் 527.305 மீட்டர். அணையின் நிறை நீர் மட்டம் 554.780 மீட்டர். உச்சநீர் மட்டம் 555.65 மீட்டராகும். அணையின் கரை மேல் மட்டம் 557.780 மீட்டராகும். அணைக்கட்டின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டராகும். இந்த அணையின் நீர் வழிந்தோடி உலகின் பிரபலமான அணைக்கட்டுகள் அமைந்துள்ள பிலிப் பக்கெட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது அணைக்கு கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.

பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மி.கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் வரத்து கிடைக்கப் பெறும் அணையின் வண்டல் மண்படிந்து நீரின் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் நீரியல் ஆய்வகம் 2002ம் ஆண்டில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2002ல் நீரியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் 197.95 மி.கன அடி உள்ள பரப்பலாறு அணையின் நீர் மட்டம் 4.021852 மி.க. மீட்டர் குறைந்துள்ளதாகரும் 1.58409 மி.கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது எனவும் அறக்கை சமர்பிக்கப்பட்டது. நீரியல் ஆய்வக அறிக்கை எண் 1/2003 மதிப்பிட்டுள்ள 1584090 கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த 12.55 லட்சம் தொகைக்கான மதிப்பீடு தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரப்பலாறு அணையின் மூலமாக 1504 டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணைக்கட்டின் நீர் ஆதாரத்தின் மூலமாக ஒரு டன் உணவு உற்பத்திக்கு ரூ.6300 மட்டுமே செலவாகும் என விவசாயத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ரூ.4480 மட்டுமே எனவும் விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணைக்கட்டின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூர்  ஆகிய இரு மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள்குளம் அணைக்கட்டு, சடையகுளம் அணைக்கட்டு, ராமசமுத்திரம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி பெரியகுளம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி அணைக்கட்டு, வரதாகன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1278 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பயனடைந்து வருகிறது. பரப்பலாறு அணையின் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கோறையூத்து அணைக்கட்டு ஒட்டனை அணைக்கட்டு, அரவக்குறிச்சி அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1323 ஏக்கர் நிலம் பாசனப்பயன்பாடு பெற்று வருகிறது. தற்சமயம் உலக வங்கியின் நிதி ஆதாரம் மூலமாக பரப்பலாறு அணை மராமத்து செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிலத்தடி நீரை சேமிக்க கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியதால் இன்றைக்கு குடிநீர் ஆதாரம் வெகுவாக காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீர்வளத்தை காப்பதற்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலமாக குளங்கள் முதல் அணைக்கட்டுகள் வரை மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீர்வள ஆதாரம் பெருக அணைக்கட்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் தமிழக முதல்வரை விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்வேறு சிறப்புத்தகுதி படைத்த பரப்பலாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: