முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி தனியார் அனல்மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கரதீவிபத்து

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, ஆக.- 15 - தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 4பேர் உயிரிழந்தனர்.  தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் செய்யப்படும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. மாவட்டத்தில் பெருகிவரும் அனல்மின் நிலையங்கள் போக ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு, இரால் ஏற்றுமதி நிறுவனங்கள், கெமிக்கல் தொழிற்சாலைகள் என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தூத்துக்குடியை பொறுத்தவரை புதியதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களில் தொழிலாளர்கள் சிக்கி பலியாகுவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடிரூமதுரை நான்குவழிச்சாலையில் புதூர்பாண்டியாபுரம் அருகே கீழஅரசரடியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்து பாரத் அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்தி 210மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் நேற்று வழக்கம்போல மின்சாரம் உற்பத்தி பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் காலை 10.30மணியளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. மின்சார உற்பத்திக்காக நிலக்கரியானது கழிவுகள் அகற்றப்பட்டு அதன்பின்னர் கிரஷர் ஹவுசில் அரைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட் மூலமாக மின்உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் நேற்று கன்வேயர் பெல்டில் நிலக்கரி கொண்டு செல்லும் போது அதிக அழுத்தம் காரணமாக நிலக்கரியில் தீ பற்றியது. காற்று வேகமாக அடித்த காரணத்தினால் தீ மளமளவென்று பரவி நிலக்கரி அரைக்கப்படும் கிரஷர் ஹவுஸ் பகுதி வரை தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததைக்கண்ட அனல்மின் நிலையத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். இதில் சிலர் கன்வேயர் பெல்ட்டின் டவரில் ஏறி தீயை அணைத்தனர்.

தீயை அணைக்க போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீ வேகமாக பரவியதுடன் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கன்வேயர் பெல்டின் டவரில் நின்றவர்கள் தீ வெப்பத்தில் சிக்கி தவித்தனர். தீயில் இருந்து உயிர் தப்புவதற்காக மேலிருந்து சிலர் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில், அசாம் மாநிலத்தின் குல்காப் மாவட்டத்தை சேர்ந்த குரியாசாகிப் மகன் கூகுக்லி(வயது 19), கோரம்பள்ளம் மாதவன்நாயர் கிழக்குத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மால்ராஜ்(47), கழுகுமலை இந்திரபிரம்மதேசம் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் லவக்குமார்(22), ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த மனோகரன் மகன் சக்தி(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த சரவணக்குமார்(33), சுடலைமுத்து(35), நாகேந்திரன்(22), சார்லஸ்(31), சுரிையநாராயணன்(21) ஆகியோர் தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட், தூத்துக்குடி மற்றும் ஸ்டெர்லைட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ்டுபட்டனர். சுமார் 7மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரளவிற்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதும் மேலும் தீ பரவாமல் தடுக்க அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரிகள் அனைத்தும் நீருற்றி குளிர்விக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பலகோடி ரூபாயக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கலெக்டர் ஆஷிஷ்குமார் உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி விபத்திற்கான காரணம் குறித்து அறியுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னியின்செல்வன் தீ விபத்து பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து எஸ்.பி.,ராஜேந்திரன், ஏ.எஸ்.பி., மகேஷ், டி.எஸ்.பி., நாராயணன், தீயணைப்பு தடுப்பு மீட்புபணித்துறை உதவி இயக்குநர் சாகுல்ஹமீது ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாதுகாப்பு கருதி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தெர்மல் அனல்மின்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுறை ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

படவிளக்கம்

தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ பற்றி எரியும் காட்சி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்