முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் விவகாரம்: மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பேசி வரும் மத்திய அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்று நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்தனர். 

மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியாளர் சுந்தர்ராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் வழக்கின்  தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மேலும் 2 மனுக்களை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

இது தவிர மத்திய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமலேயே அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்கு அந்த ஆணையம் அனுமதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், மத்திய அரசு வக்கீல் என்ன விளக்கம் கூறவுள்ளார் என்று கேள்வி கேட்டனர். அந்த சமயத்தில் மத்திய அரசு தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.  

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோதிமணி, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நடந்து கொள்ளும் விதத்திற்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் அமைச்சகம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பின்பற்றும் நடைமுறைகளை இதற்கும் பின்பற்றக் கூடாது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது. கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினை இதில் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்ற மாநில ஆணையத்திடம் அறிவுரைகளை கேட்டு முடிவு எடுக்கக் கூடாதா? அதை ஏன் பின்பற்றுவது கிடையாது? 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொண்ட கனநீர் கடலில் கலந்தால் அங்குள்ள உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் இவ்வாறு சுற்றுச்சூழல் ஆணையம் செயல்படுகிறது. 

இந்த வழக்கு கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பேட்டிகளையும், அறிக்கைகளையும் தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 25-ம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை பொறுத்த வரையில் உச்சநீதிமன்றத்தைதான் மதிக்கிறது. உயர்நீதிமன்றங்களை மதிப்பது கிடையாது. பிறகு ஏன் உயர்நீதிமன்றத்திற்கு வர வேண்டும். 

இந்த சென்னை உயர்நீதிமன்றம் தனது 150 வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பாரம்பரியமிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட கிடையாதா?

கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பான அறிவிப்பை எப்படி அறிவிக்கலாம்? உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டும் தான் மத்திய அரசு மதிக்குமா? உயர்நீதிமன்றம் பற்றி பொதுமக்கள் மத்தியில் என்ன நினைப்பார்கள்? 

இந்த வழக்கை விசாரித்த நாள் முதல் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் அறிவித்து வரும் ஒவ்வொரு அறிவிப்புகள் குறித்தும் எனக்கு தினந்தோறும் எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் வருகிறது. இந்த வழக்கை விசாரிக்காமல் விட்டுவிட முடிவு செய்யலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு நீதிபதி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.    

இதையடுத்து, இந்த மனு குறித்து வரும் செவ்வாய் கிழமைக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்