முக்கிய செய்திகள்

பணத்தை வாரி வாரி கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்-ஜெயலலிதா

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
as 1

 

மதுரை,ஏப்.- 5 - என்னதான் பணத்தை வாரி வாரி கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2 நாட்களாக மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காளவாசல் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து விட்டு அவர் சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலையில் திட்டமிட்டபடி ஆண்டிபட்டிக்கு மதியம் 1.15 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு:

கேள்வி: தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறீர்கள். பிரச்சாரம் உங்களைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது. 

பதில்: எனது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வெற்றி சுமூகமாக உள்ளது. 

கேள்வி: தேர்தல் கமிஷன் நடவடிக்கை பற்றி...

பதில்: தேர்தல் கமிஷன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையும் மீறி தி.மு.க.வினர் பணத்தை வாரி கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்கவே மாட்டார்கள். இது உறுதி. 

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். பின்னர் அவர் ஆண்டிபட்டி புறப்பட்டு சென்றார். போடி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து விட்டு மாலையில் மதுரை திரும்பிய அவர், மதுரையில் அய்யர்பங்களா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். அப்போது அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு வந்திருந்தனர். வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: