முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்சிலர்களை திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி. ஆக.17 -  தமிழக முதல்வரின் சீரிய திட்டமான பசுமை வீடுகள் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்த புகாரை அடுத்து மாவட்ட திட்ட அலுவலரிடம் புகார் குறித்து தெரிவிக்க 

சென்ற அதிமுக மாவட்ட சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை மாவட்ட திட்ட அலுவலர் வீரணன் 

தரக்குறைவாக திட்டியதால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், மாநில அம்மா 

பேரவை செயலாளருமான டி.ஆர்.அன்பழகன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் 

மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் நாகராஜன், அதிமுக கவுன்சிலர்கள் செல்வம், nullமாலை, 

ஏகாம்பரம், ஐ.கே.முருகன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் மாண்புமிகு தமிழக முதல்வரின் சீரிய 

திட்டமான பசுமை வீடுகள் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், 

உண்மையான ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே 

ஒதுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். 

 இது சம்மந்தமாக பலமுறை மாவட்ட திட்ட அலுவலர் வீரணனிடம் புகார் தெரிவித்து இதுவரை 

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டனர். மேலும் மாவட்ட ஊராட்சிக் குழுக் 

கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் கலந்து கொள்ள பலமுறை வ​யுறுத்தியும், அதைப் 

பொருட்படுத்தாமல் அவர் தன்னிச்சையாக போக்கில் செயல்படுவதாகவும் சரமாரியாக புகார் 

தெரிவித்தனர். 

 கவுன்சிலர்களை அமைதிப் படுத்திய மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் அன்பழகன், இது 

சம்மந்தமாக மாவட்ட திட்ட அலுவலரிடம் பேசியதுடன், கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் 

கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த திட்ட அலுவலர் வீரண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுக் 

கூட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இறுமாப்புடன் பதில் 

தெரிவித்ததாக தெரிகிறது. 

 இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் 

மற்றும் கவுன்சிலர்கள் பசுமை வீடுகள் சம்மந்தமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், மாண்புமிகு 

முதல்வர் அவர்களின் திட்டம் சரியான முறையில் செயல்படுத்தாமல் அலுவலர்கள் அலட்சியப் 

போக்குடன் நடந்து கொள்வது குறித்தும், புகார் தெரிவிக்க மாவட்ட திட்ட அலுவலர் வீரணனை சந்திக்க 

சென்றனர். 

 அப்போது திட்ட அலுவலர் வீரணன் அறையில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் 

டி.ஆர்.அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது அவர்களை பார்த்து 

அறைக்குள் நுழைந்ததை கடும் சொற்களால் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்கள் 

புகார் தெரிவிக்க சென்ற மக்கள் பிரதிநிதிகளை அதிகாரி ஒருமையில் பேசியதை எதிர்த்ததால் கூச்சல் 

குழப்பம் ஏற்பட்டது.  இதனால் ஆவேசமடைந்த திட்ட அலுவலர் வீரணன் மீண்டும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் 

அன்பழகன் மற்றும் கவுன்சிலர்களை கடுமையான சொற்களால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து 

கவுன்சிலர்கள் திட்ட அலுவலரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த திட்ட 

அலுவலரின் ஆதரவாளர்களான சில அலுவலர்கள் சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை தகாத 

வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. 

 தகவல் அறிந்த டி.எஸ்.பி. பரமேஸ்வரன், ஆர்.டி.ஓ. சுப்பிரமணி, தாசில்தார் மணி மற்றும் 

அதிகாரிகள் திட்ட அலுவலகத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினர். மாவட்ட திட்ட 

அலுவலர் வீரணன் மற்றும் அவரது ஆதரவான திட்ட அலுவலக ஊழியர்கள் மக்களின் வரிப் பணத்தில் 

சம்பளம் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராகவும், அரசின் நலத்திட்டப் பணிகளுக்கு எதிராகவும் 

செயல்பட்டு வருவதுடன், நியாயம் கேட்கச் சென்ற சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை திட்டமிட்டு 

அவமானப்படுத்தியது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் 

ஏற்படுத்தியுள்ளது. 

 தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் பல்வேறு பணிகள் மூலமும், அரசின் 

நலத்திட்டங்களின் மூலமும் மாதம் தோறும் கணிசமான தொகை பெற்றுக் கொண்டு அரசின் 

திட்டங்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதுடன், ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய 

நலத்திட்டங்களை திட்டமிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு செயல்படுத்தி வரும் திட்ட அலுவலர் வீரணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்