முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க குறிவைக்கும் பாஜக!

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. - 18 - பா.ஜ.க வில் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி உள்பட தகுதியுடைய வேட்பாளர்கள் 6 பேர் உள்ளதாக அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு பா.ஜ.க கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதையடுத்து இந்த விஷயத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பா.ஜ.க அமைதி காத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போதே பா.ஜ.க தெரிவிக்க வேண்டும் என்று நிதீஷ்குமார் நிபந்தனை விதித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் முன்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அவருக்கு உறுதியளித்துள்ளேன். பா.ஜ.க வில் 6 பிரதம வேட்பாளர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒருவர். அதே போல மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. ஆனால் இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நிதிஷ்குமார் அத்வானியை பிரதம வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறாரா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சியைச் சாராத ஒருவரே பிரதமர் ஆவார் என்ற அத்வானியின் கருத்தை நான் ஏற்கவில்லை. 2014ம் ஆண்டில் நிச்சயம் பா.ஜ.க வைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆவார். தேர்தலில் 170 இடங்களில் பா.ஜ.க வென்று விட்டால் போதும், கூட்டணிக் கட்சிகள் முழுமையாக பா.ஜ.க வை ஆதரித்துவிடும். இதனால் குறைந்த பட்சம் 170 இடங்களில் வெல்வதே பா.ஜ.க வின் இலக்காகும்.

எனக்கு மீண்டும் பா.ஜ.க தலைவர் பதவியைத் தர ஆர்.எஸ்.எஸ் தயாராக இல்லை என்ற கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. கட்சித் தலைவர் பதவி எனக்குக் கிடைக்கும் என நான் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், கிடைத்தது. மீண்டும் பதவி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. எனக்குக் கவலையில்லை என்றார் கட்காரி. அதே நேரத்தில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார கமிட்டியின் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்க நிதின் கட்காரி மறுத்துவிட்டார். இதன்மூலம் நரேந்திர மோடியை முன் வைத்தே பா.ஜ.க தனது பிரச்சாரத்தை நடத்தவுள்ளது தெளிவாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்