முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.- 19 - நிலக்கரி சுரங்க உரிமம் வழங்குவதில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி இருப்பதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா, தெலுங்குதேசம் போன்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வருவாய் இழப்பும் முறைகேடும் நடந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டது. இது நாட்டையே உலுக்கியது. இதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, கருணாநிதி மகள் கனிமொழி உள்பட 13-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.  இந்த நிலையில் நாட்டில் பல நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் டாடா, எஸ்ஸார்,ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேலாக லாபம் பெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமங்கள் கடந்த 2005 முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்தான் நிலக்கரி துறை வகித்தார். அதனால் ரூ. 2 லட்சம் கோடி ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா, தெலுங்குதேசம் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதையொட்டி பிரதமர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றறு பாரதிய ஜனதா மூத்த தலைவரும் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி கோரி உள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு நேரடியான தொடர்பு உண்டு என்று சொல்ல முடியாது. ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சார்ந்த முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம். இதை கணக்கு தணிக்கை அதிகாரிகளின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2005 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்தான் நிலக்கரி சுரங்க துறையை கவனித்து வந்தார் எனவே அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மற்றுமல்லாமல் இந்த ஊழலுக்கு அவர் நேரடியாகவும் பொறுப்பேற்றாக வேண்டும். இதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அவர் ஆத்மபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நடைபெற்றுள்ள இமாலய ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை உடனே மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் எளிதில் விட்டுவிடமாட்டோம். பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம். நீதியை நிலைநாட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அருண்ஜெட்லி மேலும் கூறியுள்ளார். 

அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம், சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவும் பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 

தெலுங்குதேச கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நாகேஸ்வரராவ் கூறுகையில் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டது. அதனையடுத்து தற்போது ரூ.2 லட்சம் கோடி சுரங்க உரிமம் ஒதுக்கீடு ஊழலையும் அதே மத்திய கணக்கு தணிக்கை குழு வெளியிட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசானது ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அதனால் இனிமேல் பிரதமர் மன்மோகன் சிங் பதவி வகித்த லாயக்கற்றவராகிவிட்டார். அவர் உடனடியாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்