முக்கிய செய்திகள்

தமிழகத்திற்கு படையெடுக்கும் அகில இந்திய தலைவர்கள்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
Sonia-Gandhi

 

சென்னை,ஏப்.- 5 - தமிழக சட்டப் பேரவை தேர்தலையொட்டி தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்தை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் 13 ம் தேதி நடைபெறவுள்ளது. பிரச்சாரம் செய்ய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கடைசி கட்ட பிரச்சாரம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தேசிய தலைவர்களும் தமிழக தேர்தல் களத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளனர். 

இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா சென்ன தீவுத்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதே போல் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி 6 ம் தேதி ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பா.ஜ.க. மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் ஏற்கனவே தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அவர் மீண்டும் 6,8, 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதே போல் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, குஜராஜ் முதல்வர் நரேந்திர மோடி, நடிகை ஹேமமாலினி, முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்  ஆகியோரும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வரும் 9 ம் தேதி மதுரையிலும், 10 ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதே போல் கம்யூனிஸ்டு  பிரகாஷ்காரத், சீதாராம் எச்சூரி, ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: