முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் என் உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 20 - ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் என் உள்ளம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும்.  முப்பது நாட்கள் பகலில் பருகாமலும் உண்ணாமலும் நோன்பு இருந்து,  தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவரைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும். தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டுமெனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்