முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்குமாநில மக்களுக்கு போலீஸ்அறிவுரை ரயிலில்கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை.ஆக.- 20 - வடகிழக்கு மாநில மக்கள் பயப்பட வேண்டாம். பீதி அடைய வேண்டாம், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக முதல்​அமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார். ஆனாலும் நேற்று முன்தினம்  இரவும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் கூடியது. 3​-வது நாளாக நேற்று இரவும் ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தங்களுக்கு பாதுகாப்பு இருந்தாலும், உறவுகளின் அழைப்பை ஏற்று சொந்த மாநிலத்திற்கு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக சென்னையிலும் வதந்தி பரவியதில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்தவர் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் பரவிய வதந்தி சென்னையிலும் பரவி வருவதால் இங்குள்ள வட கிழக்கு மாநில மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இங்குள்ள இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி நேற்று 3​வது நாளாக கூட்டம் நிரம்பி வழிந்தது.  அவர்களை போலீசார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் குறியாக இருந்தனர். இதனால் ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். பெங்களூரில் இருந்து சென்ட்ரல் வழியாக கவுகாத்திக்கு 4 சிறப்பு ரெயில்கள் நேற்று முன்தினம்இரவு இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் சென்ட்ரல் வந்தபோது நிரம்பி வழிந்தது. சுமார் 4 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரயில்களில் போதுமான இடம் இல்லாததால் படிக்கட்டுகளிலும் கழிவறைகளிலும் அமர்ந்தபடி அவர்கள் பயணத்தை தொடங்கினர். அஸ்ஸாம் மாநில கலவரத்தை தொடர்ந்து பெங்களூருவில் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக தகவல் வெளியானதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். சென்னையில் உள்ள வடமாநிலத்தவரை அந்த ரெயில்களில் ஏற்ற முடியாததால் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. அதில் 8 ரெயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஒவ்வொரு ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு சென்னையைச் சேர்ந்த வடகிழக்கு மாநிலத்தவர்களை ஏற்றினார்கள். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் நேற்றுஅதிகாலை 2 மணிக்கு ஒரு ரெயிலும் நேற்று காலை 6.30 மணிக்கு மற்றொரு ரெயிலும் இதைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு இன்னொரு சிறப்பு ரெயிலும் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த 4 ரெயில்களிலும் சென்னையைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். நேற்று காலை 2 ஆயிரம் பேரும் நேற்று முன்தினம் இரவு 1,500 பேரும் சென்னையில் இருந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையில் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்த வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு போலீஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் காவல் உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் 98402 95100, 96770 66100, 97890 88100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் நிலையத்திற்கு நேற்று மிக குறைந்த அளவில்தான் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வந்து இருந்தனர். ஆனாலும் அந்த எண்ணிக்கை அதிகமாக கூடுமானால் சிறப்பு ரெயிலோ, அல்லது கூடுதல் பெட்டியோ இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து வெளியேறுபவர்களில் நேற்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் சேர்ந்து கொண்டனர். இவர்களில் சிலர் பேசும்போது, தமிழகத்தில் நாங்கள் மிகவும் நிம்மதியாகத்தான் உள்ளோம். எங்களுக்கு இங்கு எந்தவித பயமும் இல்லை. பீதியால் பயந்து கொண்டு நாங்கள் வெளியேறவில்லை. எங்கள் ஊரில் எங்கள் பெற்றோர்கள் மட்டும்தான் உள்ளனர். ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வெளிமாநிலங்களில் வேலை செய்து பணத்தை அனுப்புகிறோம். அங்கு எங்கள் நிலங்களும், வீடுகளும் பாதுகாப்பாக இல்லை. வங்க தேசத்தில் இருந்து வந்தவர்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டோ, எங்கள் பெற்றோர்களை ஊரை விட்டு துரத்தியோ அத்துமீறி செயல்படுகிறார்கள். அதனால்தான் நாங்கள் அவசரமாக வீடுகளுக்கு செல்கிறோம் என்றனர். சொந்த ஊர் பயம் தான் அவர்களை இங்கிருந்து செல்ல வைக்கிறது என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்