முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதை ஏற்கமுடியாது-வெங்கய்யா நாயுடு

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 5 - தேர்ல் ஆணையத்தின் நடவடிக்கை அறிவிக்கப்படாத நெருக்கடி போல் இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறுவதை ஏற்கமுடியாது என்று வெங்கய்யா நாயுடு கூறினார். பா.ஜ.க. துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்துள்ளேன். நேற்று சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். இன்று திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறேன். மின் தட்டுப்பாடு நிலவும் போது மிக்சி, கிரைண்டர் எதற்கு? போதிய  ஆடைகள் இல்லாத மக்களுக்கு வாசிங்மிஷன் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? இந்த இலவச அறிவிப்புகள் வாக்காளர்களை கவர்வதற்காக அளிக்கப்படும் மறைமுக லஞ்சமாகும். இவற்றை ஏற்க முடியாது.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுவை ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திற்க்கும் நான் சென்று வந்துள்ளேன். இங்கும் வந்துள்ளேன். இங்கும் ஆளும் அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். லஞ்ச ஊழல், மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு காரணமாக இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.  இது ஜோதிடம் அல்ல. உண்மை நிலையை நேரில்  பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன்.

இந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. தன்னுடைய சொந்த பலத்தில் போட்டியிடுகிறது. பா.ஜ.க.வுக்கு மக்கள் கடந்த காலத்தைவிட அதிக ஆதரவை நிச்சயம் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: அலைவரிசை ஊழல் விசாரணை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில்: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் விரோத ஊழல் அரசாக உள்ளது. அலைவரிசை ஊழல் தொடர்பாக இந்த அளவாவது விசாரணை நடைபெற்றுள்ளதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலையீடுதான் காரணம். 16 மாதங்களுக்கு பிறகுதான் வழக்கு பதிவு செய்தனர். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இந்த பிரச்சனையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆரம்பம் முதலே மூடி மறைப்பதற்கு தான் பார்த்தது.

கேள்வி: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணைய செயல்பாட்டை தி.மு.க. விமர்சித்து வருகிறது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இங்கு நிலவுவதாக முதல்வர் குற்றச்சாட்டியுள்ளாரே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்னும் ஒருபடி வேகமாக செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலின்போது, தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை நாடே அறியும். இதை அறவே தடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை குறை கூறுவதை ஏற்க முடியாது. தேர்தல் ஆணைய செயல்பாட்டின் காரணமாக யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. அப்படி  இருக்கும்போது, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்று கூறுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு வெங்கய்யா நாயுடு பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்