முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்றும் - நாளையும் ஸ்டிரைக்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 - கிராமப்புற வங்கி கிளைகள் மூடப்படக் கூடாது என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை தொடங்கும் இந்தப் போராட்டம் தொடர்ந்து 48 மணி நேரம் நீடிக்கும் என்று வங்கி ஊழியர் சங்க தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர். 

9 சங்கங்கள் ஒருங்கிணைந்து வங்கி ஊழியர் - அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒருங்கிணைந்த அமைப்பாக இது உருவாகி உள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, 

மத்திய அரசு வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. வங்கி சீர்திருத்த சட்டம் அமலுக்கு வந்தால் வங்கிகளில் உள்ள பொதுமக்களின் சேமிப்புக்கு ஆபத்து ஏற்படும். அந்த சேமிப்பை காப்பாற்றுவதற்காகவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். 1969 ம் ஆண்டு இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இதன் காரணமாகத்தான் உலகளவில் வங்கிகள் சரிவை சந்தித்த போதும் இந்திய வங்கிகள் சரிவுக்கு ஆளாகாமல் தப்பின. மத்திய அரசின் புதிய திட்டம் செயலுக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் தனியாருக்கு உள்ள ஓட்டுரிமை ஒரு சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும். தனியார் வங்கிகளில் 10 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயரும். தற்போது தனியார் வங்கிகளில் பொதுமக்களின் பணம் ரூ. 12 லட்சம் கோடி உள்ளது. தனியாருக்கு ஓட்டுரிமை அதிகரிக்கப்பட்டால் பணத்தை கையாளும் உரிமை அவர்களிடம் அதிகளவு செல்லும். இது நாட்டுக்கு நல்லதல்ல. நமது நாட்டில் 50 சதவீத மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாத நிலை உள்ளது. எனவே கூடுதல் வங்கி கிளைகள் கிராமப்புறங்களில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இருக்கின்ற கிராமப்புற வங்கிகளை மூடி விட்டு அப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுகிறது. இது நாட்டு வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. 

மரணமடையும் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கை கொள்கை அளவில் ஏற்கப்ப்டட போதிலும் அதை அமல்படுத்தவில்லை. 

எங்களுடைய பலத்தை எதிர்ப்பை மீறி இன்று வங்கி சீர்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதாவை கைவிடும்படி  கூறும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்றும் நாளையும் நாட்டில் உள்ள 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள். இதனால் 2 நாட்களுக்கு அனைத்து வங்கிகளும் செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்