முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி பதவியில் இருந்து அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- முரளீதர் ராவ்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 5 - தேர்தல் அதிகாரியையும், வீடியோ கிராபரையும் தாக்கியதாக அழகிரி மீதும், தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குகளை பதிவு செய்திருப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து ரசாயன உரத்துறை அமைச்சர் அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர் ராவ், பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டுள்ளார்.  கடந்த 1 ம் தேதியன்று மத்திய அமைச்சர் அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கு நடந்த சம்பவத்தை தேர்தலை கண்காணிக்கும் பறக்கும் படையினர் வீடியோ படம் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள் அந்த வீடியோ கிராபருடன் வாக்குவாதம் செய்தனர். உடனே அந்த வீடியோ கிராபர் தான் எடுத்த படத்தை மேலூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவிடம் ஒப்படைத்தார். 

அவரிடம் இருந்தும் கேமிராவை பறிக்க தி.மு.க.வினர் முயன்றனர். ஒரு கட்டத்தில் தாசில்தாரை அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவவே தமிழ்நாடு வருவாய்த் துறை அதிகாரிகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு அழகிரியை கைது செய்யக் கோரி பல இடங்களில் போராட்டமும் நடத்தினார்கள். தேர்தல் பணியை புறக்கணிக்கப் போவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான தாசில்தார் காளிமுத்து புகார் செய்ததையடுத்து கீழவளவு போலீசார் கடந்த வெள்ளியன்று இரவே வழக்குப் பதிவு செய்தனர். 

தென் மண்டல தி.மு.க. அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன், மேலூர் தி.மு.க. யூனியன் செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உட்பட 50 பேர் மீது தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்தனர். இ.பி.கோ. 143( 5 நபருக்கு மேலாக கூடுதல்), இ.பி.கோ. 341(வழிமறித்தல்), இ.பி.கோ. 332(அரசு ஊழியரை அடித்தல் அல்லது தாக்குதல்), இ.பி.கோ. 150(தடையை மீறி அரசு பணியை தடுத்தல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அழகிரி உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து மு.க. அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் கேட்டுக் கொண்டுள்ளார். 

மதுரையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூட தங்கள் கடமையை ஆற்ற முடியவில்லை. எனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அழகிரியை மத்திய மந்திரி சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று காங்கிரசும், தி.மு.க.வினரும் நினைக்கிறார்கள். அதாவது மக்களை விட இவர்கள் பணத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். 

இதுவே தமக்கு கடைசி வாய்ப்பு என்று கருதும் இவர்கள் ஜனநாயகத்தின் மீது போர் தொடுத்திருப்பதாகவே மேலூர் சம்பவத்தை கருத வேண்டியதிருக்கிறது. அதனால்தான் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை கூட அச்சுறுத்தி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சிறப்பான நடவடிக்கையை திசை திருப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் மூலம் உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. எனவே இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு மத்திய மந்திரி பதவியில் இருந்து அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்