முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.26 - ஆறரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை மாதம் 12-​ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரத்து 700 பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தாள்​1, பட்டதாரி ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் தாள்​2, தேர்வு எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 1/2 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் எழுதினார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதித் தேர்வு நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர்களின் வேலை வாய்ப்பை இந்த தேர்வு நிர்ணயிப்பதால் இரவு​ பகல் பாராமல் கடினமாக படித்து தேர்வு எழுதினர். பலர் பணம் செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்தனர். 25 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த தேர்வர்கள் ஒவ்வொருவரும் அழுது புலம்பினர். தேர்வுக்கு போதிய நேரம் இல்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடத்தில் பதில் அளிக்க முடியவில்லை என்று தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. 

தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்று உறுதியாக கூறினர். ஆனால் இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. வினாக்களுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட்டனர். அதை பார்த்து தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்தனர். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தேர்ச்சிக்கான மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதற்கு தேர்வு வாரியம் செவி சாய்க்கவில்லை. 

இந்த நிலையில் தகுதித் தேர்வு முடிவு நள்ளிரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்திரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-​ ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரத்து 863 பேர் எழுதினார்கள். இதில் 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாள்​1 தேர்வில் 1,735 பேரும், தாள்​2 தேர்வில் 713 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 768 பேரும், பெண்கள் 1,680 பேரும் அடங்குவர். தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும். தாள்​1-​ல் உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா 150 மதிப்பெண்ணுக்கு 122 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றார். தாள் 2-​ல் கணிதம்​ அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினம் வேதாரண்யத்தைச் சேர்ந்த பி.சித்ரா 142 மார்க் எடுத்து முதலிடம் பிடித்தார். சமூக அறிவியல் பாடப்பிரிவில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார்.

தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 3-​ந்தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இத்தேர்வை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. புதிதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே எழுத முடியும். மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு கடிதம் அனுப்பப்படும். தேர்வு முடிவுகளை இணை தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்