முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் முன்னாள் காங்., எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

வேலூர்.ஆக,26 - வேலூரில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக வந்த புகாரின் பேரில் வேலூர் மற்றும் சென்னையில், ஞானசேகரனின் வீடு, காம்ப்ளக்ஸ் உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் 4 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் சி.ஞானசேகரன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அளவிற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனி, விஜய் மற்றும் போலீசார் நேற்று காலை 10 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். பல மணி நேரமாக சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

இதே போல சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஞானசேகரனின் வீடு, சென்னை வடபழனியிலுள்ள லாட்ஜ், மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் சென்னை டி.எஸ்.பி. முரளி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 

இதே போல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஞானசேகரனுக்கு சொந்தமான லாட்ஜ் - காம்ப்ளக்ஸ், வாணியம்பாடி அருகே ஞானசேகரனின் சொந்த ஊரான வெள்ளக்குட்டையில் உள்ள ஞானசேகரனின் தம்பி குணசேகரனின் வீடு ஆகியவற்றில் திருவண்ணாமலை டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

மொத்தத்தில் ஞானசேகரனுக்கு சொந்தமான 5 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூரில் ஞானசேகரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது ஞானசேகரன் வீட்டில் இருந்தார். அங்கு நிருபர்களும் வீடியோகிராபர்கள் மற்றும் புகைப்படக் காரர்களும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். காங்கிரசாரும் வீட்டின் முன்பு கூடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்