முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு- குவாரிகளுக்கு சீல்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மேலூர்,ஆக.- 27 - மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகளில் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.  மேலூரை அடுத்த திருவாதவூர் பகுதிகளில்  கலெக்டர் அன்சுல்மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டபோது விலை உயர்ந்த கிரானைட் கற்களை  பூமிக்குள் பதுக்கி வைத்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தோண்டி பார்க்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகளையும் கிரானைட் கற்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குகளையும் (ஸ்டாக் யார்டு) சீல் வைத்து அதை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறைகேடான கிரானைட் குவாரிகளில் பணிபுரியும் ஊழியர்களை வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு புறம்போக்கு இடத்தில் போடப்பட்ட ஷெட்கள் மற்றும் கட்டிடத்தை இடித்து தள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார்.  திருவாதவூர், பஞ்சபாண்டவர் மலை அருகே பி.கே.எஸ். சிந்து கிரானைட் நிறுவனத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஒர்க்ஷாப் மற்றும் அலுவலக கட்டிடங்கள் அமைத்து இருந்தனர். அதை வருவாய் அதிகாரிகள், காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் அங்கிருந்த கட்டிடம் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் இடித்து தள்ளினர். பின்னர் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இடையபட்டி பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆர்.டி.ஓ., உதவி இயக்குனர்  மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலூர் பகுதிகளில் கிரைனைட் கற்களை வெட்டி எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் தி.மு.க. ஆட்சியில் நடந்தன. இதில் பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகாரின்பேரில் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 18 குழுக்களை அமைத்து தற்போது ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பி. பழனிசாமி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிரானைட் அதிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்தான் கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. போலீசில் சரணடைந்தார். பின்னர் அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி, பி.ஆர்.பி.யிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என கோரி மேலூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து பி.ஆர்.பி.க்கு மூன்றரை நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டு அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. குவாரிகளுக்கு அவரை நேரில் அழைத்து சென்று நேற்றுமுன்தினம் காவல்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இந்த காவல் இன்று முடிவதையடுத்து பழனிசாமி  மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்