முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``ஓணம் திருநாள்'' முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 29 - ஓணம் திருநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமால், வாமன அவதாரம் பூண்டு, மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, ஆண்டுதோறும் மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் பத்து நாட்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டும், அக்கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்துவிளக்கேற்றியும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இப்பண்டிகையின்போது, ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஆணவம் அகன்று, சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இவ்வோணம் பண்டிகை உணர்த்துகிறது. இந்த இனிய திருநாளில், அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்