முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து கிரானைட் நிறுவனத்தில் வெடி மருந்துகள் சிக்கின

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர், ஆக. 31 - மேலூர் பகுதியில் உள்ள சிந்து கிரானைட் நிறுவனத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட 150 கிலோ வெடி மருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி  ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகளை உள்ளடக்கிய 18 குழுக்கள் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், திருவாதவூர், இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில்  கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அளவிடும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவுப்படி அதிகாரிகள் திருவாதவூர் பஞ்சபாண்டவர் மலை அருகே அமைந்துள்ள சிந்து கிரானைட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கழிவறை கட்டிடத்திற்குள் பாதுகாப்பின்றி 150 கிலோவுக்கு மேலாக வெடி பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வெடிகுண்டு நிபுணர் சந்திரமுருகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது முட்புதருக்குள் பாதுகாப்பின்றியும், ஆவணங்கள் இல்லாமலும் 150 கிலோ அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கார்டெக்ஸ் போன்ற சக்திவாய்ந்த வெடி பொருட்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி அனைத்தையும் ஒரு தனி அறைக்குள் பூட்டி வைத்து சீல் வைத்தனர். 

இது குறித்து மேலூர் தாசில்தார் வசந்தா ஜூலியட் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிந்து கிரானைட் மீது சட்டவிரோதமாக வெடி மருந்து பொருட்களை பதுக்கி வைத்திருத்தல், பொதுமக்களுக்கு உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், வெடிபொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் நிருபர்களிடம் கூறிய போது, பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்ட இந்த வெடி பொருட்கள் வெடித்திருந்தால் அந்த பகுதியில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் பல்க் அருகிலேயே உள்ளதால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டனர். மேலும் இந்த பொருட்கள் தீவிரவாதிகளின் கையில் கிடைத்திருந்தால் மாவட்டமே பெரிய அளவில் சேதத்தை சந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் கலெக்டர் இங்கு வந்து ஆய்வு செய்த போது சிந்து கிரானைட்டுக்கு சொந்தமான கட்டிடம் முழுவதும் கட்டுக்கட்டாகவும், மூடை மூடையாகவும் ஆவணங்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை ஆய்வு செய்வதற்காக மேலூர் தாசில்தார் வசந்தா ஜூலியட் தலைமையில் ஒரு குழுவையும் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே இந்நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் வெடி மருந்துகளும் கிலோ கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனடியாக கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

பிடிபட்ட வெடி மருந்துகள் விபரம்:

 

1. அமோனியம் நைட்ரேட் ---- 150 கிலோ

2. கார்டெக்ஸ் ---- 45.750 மீட்டர்

3. ஜெல்பவுடர் ----- 719 கிலோ

4. ஜிபா பவுடர் ---- 30 கிலோ

5. சாதாரண டெட்டனேட்டர் --- 1,800

6. எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ----- 425

7. சிறிய பவர் சோர்ஸ் --- 1 மிஷின்

8. சேப்டி ப்யூஸ் --- 1098 மீட்டர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்