முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 6 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று பகல் 12.01 மணிக்கு மேல் 12. 25 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி மண்டபத்துக்கு எதிரே உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இது குறித்து கோயில் நிர்வாக அலுவலரும், இணை ஆணையருமான ஆர். பத்மநாபன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து தினம் காலை, மாலையில் அம்மன், சுவாமி சிறப்பு வாகனத்தில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதில் கோயில் யானை ஓட்டகம் அணிவகுப்பு, குழந்தைகளின் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவையும் நடைபெறும். வரும் 14 ம் தேதி மாலை 6.05 மணி முதல் 6.29 மணிக்குள் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடைபெறும். 

திருக்கோயில் அறங்காவலர் குழு  தலைவர் கருமுத்து கண்ணன் அருள்மிகு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் ஊர்வலமாக வந்து பின்னர் அம்மனிடத்தில் சேர்ப்பிப்பார். இதையடுத்து வரும் 15 ம் தேதி திக்விஜயம் நிகழ்ச்சியும், 16 ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக வடக்காடி வீதி, மேல ஆடி வீதி, சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

16 ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பூப்பல்லக்கில் அம்மன், சுவாமி எழுந்தருள்வர். திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்படும். முக்கிய விருந்தினர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அனுமதி பாஸ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பக்தர்களுக்கு ரூ 20 கட்டணத்தில் சிறப்பு பாஸ்கள் வழங்கப்படுகின்றன. 

கோயிலுக்குள் வெளியில் அமர்ந்து திருக்கல்யாணத்தை பார்வையிடும் வகையில் ஆடி சித்திரை வீதிகளில் அகன்ற வெண்திரை அமைத்து நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருக்கல்யாணத்தை உள்ளூர் தொலைக்காட்சி மூலமும், அரசு தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயில் இணையதளம் மூலமும் திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். திருக்கல்யாணம் முடிந்ததும் கோயில் சார்பில் அன்னதானமும் மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

இதையடுத்து 17 ம் தேதி திருத்தேரோட்டமும், 18 ம் தேதி உச்சிகால பூஜை பொற்றாமரைக் குளத்தில் நடைபெறும். அத்துடன் விழா நிறைவடையும். மேலும் திருக்கோயில் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் தங்க ரிஷிப வாகனம் நடப்பாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் வரும் 12 ம் தேதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இவ்வாறு கோயில் நிர்வாக அலுவலர் பத்மநாபன் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!