முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, செப். - 10 - இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100 வது ராக்கெட் பயணம் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது  2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட இந்த பி.எஸ்.எல்.வி. சி 21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவின் முதல் செயற்கை கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ நேற்று காலை 9.51 மணிக்கு தனது 100 வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பி.எஸ்.எல்.வி -சி 21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் சென்றுள்ளது. 100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு களித்தார். இதற்காக அவர் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் வந்திருந்தார். தனது 100 வது விண் பயணத்தை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ, இதுவரை மொத்தம் 63 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ராக்கெட் பயணம் என்று பார்த்தால் நேற்றுடன் சேர்த்து மொத்தம் 37 ராக்கெட்களை செலுத்தியுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இஸ்ரோ தனது பயணத்தை ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தொடங்கியது. இந்தியாவின் முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது ரஷ்ய ராக்கெட்டாகும். அதன் பின்னர் நேற்று வரை மொத்தம் 63 இந்திய செயற்கைக் கோள்களை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. நேற்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி 21 ராக்கெட்டையும் சேர்த்து இதுவரை மொத்தம் 37 ராக்கெட்களை ஏவியுள்ளது. இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டங்களுக்காக மத்திய அரசு இதுவரை கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் நிதியை செலவிட்டுள்ளது. ஆனால் நாசாவுடன் ஒப்பிடும் போது இது மிக மிகச் சிறிய தொகையாகும். நாசாவின் வருடாந்திர பட்ஜெட் அளவு 17 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி ஒதுக்கீடு குறைவானதாக இருந்தாலும் கூட பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது இஸ்ரோ. அதில் முக்கியமானது சந்திராயன் -1. இந்தத் திட்டம் இந்தியாவை உலக அளவில் மிகப் பெரிய பெருமைக்கு வித்திட்டது என்பது நினைவிருக்கலாம். காரணம் சந்திராயன் பயணத்தின்போதுதான் நிலவில் தண்ணீர் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மேலும் நாட்டின் தொலைத் தொடர்புத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைய இஸ்ரோவின் விண் பயணங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சாதனைகள் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஏராளமான சோகக் கதைகளும் இஸ்ரோவிடம் உண்டு. பல ராக்கெட்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்