முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் பேச்சுவார்த்தை நடத்தசென்ற போலீசார் மீது தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,செப். - 11 - கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நேற்று 2வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வந்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதனால் அதிர்ச்சி அடைந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் இருந்து பேரணியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, பெருமணல், கூத்தங்குளி, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளில் அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகிய போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜு, நெல்லை எஸ்.பி.விஜயேந்திரபிதரி ஆகியோர் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் தடையை மீறி பேணியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதற்காக போராட்டக்காரர்கள் வர முடிவு செய்திருந்த வைராவி கிணறு மற்றும் தாமஸ்மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் தயாராக நின்றனர்.  ஆனால் போராட்டக்காரர்களோ, முதலில் திட்டமிட்டப்படி சாலை வழியாக வராமல் இடிந்தகரை கடற்கரை வழியாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை நோக்கி பேரணியாக 3 கி.மீ. நடந்தே சென்றனர்.  போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீசார் கடற்கரையிலே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவே உள்ள கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு கடற்கரையிலேயே தங்கினர். போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்லாத வகையில் போலீசாரும் அவர்களுக்கு முன்பு அமர்ந்தபடி இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் போராட்டக்காரர்கள் நேற்று காலை அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் தென் மண்டல ஐ.ஜி.ராஜேஷ்தாஸ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். பேச்சுவார்த்தையின் போது ஐ.ஜி. பேசுகையில், உங்களின் மீது அரசுக்கு அதிக அக்கறை உள்ளது. ஆகவே அரசு கூறும் கருத்துக்களை கேளுங்கள். அரசும் மாவட்ட நிர்வாகமும் உங்களுடன் தோழமையுடன் செயல்படும். ஆகவே போராட்டத்தை கைவிடுங்கள் உங்களுக்கு 10 நிமிடம் கால அவகாசம் தருகிறேன் என்றார். ஆனால் அதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது போலீஸ் அதிகாரிகள் நின்ற பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் அதிகாரி ஒருவரை திடீரென்று தள்ளினர். போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள், கட்டைகள் மற்றும் செருப்பை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.ஜி.ராஜேஷ்தாசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது பாதுகாவலர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசார் மீது மணலை அள்ளி வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். பின்னர் போலீசாரிடமிருந்து தப்பிக்க போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஏராளமானோர் கடலுக்குள் பல அடி தூரத்துக்கு ஓடி சென்றனர். அவர்களை அதிரடிப்படை போலீசார் கடலுக்குள் சென்று மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீசார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உவரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசாரை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று அவர்களை மீட்டு வந்தனர். இதற்கிடையில் போராட்டக்காரர்கள் போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள மதுக்கடையை அடித்து நொறுக்கி  சூறையாடினர். அங்கிருந்த பொருட்களை சாலையில் போட்டு தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி, தாமஸ்மண்டபம் மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்