முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. இயக்கம் பணபலத்தை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் முன்னாள் எம்.பி. முத்துமணி உறுதி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு,ஏப்- .7 - மக்கள் பலம் கொண்ட அ.தி.மு.க. பணபலத்தை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.  ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முன்னாள் எம்.பி. முத்துமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசியதாவது, 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அமளிக்காடாக மாறி விட்டது. நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. பணபலத்தையும், அதிகாரபலத்தையும் மட்டுமே நம்பி இக்கூட்டணி தேர்தல் களத்தில் நிற்கிறது. ஆனால் ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாகும். மக்கள் பலம் கொண்ட கூட்டணி. இந்த கூட்டணி அதிகார பலம் கொண்ட தி.மு.க. கூட்டணியை வேரோடும் மண்ணோடும் வீழ்த்தும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. 

இதனை நன்கு உணர்ந்து கொண்ட கருணாநிதி நாள்தோறும் ஏதேதோ உளறுகிறார். தோல்வி பயம் அவரை தொற்றிக் கொண்டு விட்டது. தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகிற தேர்தல் கமிஷனுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு கிடையாது. தமிழக தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் கருதுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பணம் கொடுத்தும், அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்தும் செயற்கையாக வெற்றி பெற்றது தி.மு.க. என்பதை நாடே அறியும். தேர்தல் கமிஷனும் நன்கு அறியும். அதனால்தான் தேர்தல் கமிஷன் இந்தளவிற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முக்கிய காரணம். 

தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை நாடே பாராட்டும் போது தி.மு.க. தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறது. மேலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கூட தேர்தல் கமிஷன் மீது எவ்வித குற்றச்சாட்டும் கூறவில்லை. இந்நிலையில் கருணாநிதி மட்டும் தேர்தல் கமிஷனை குறைகூறுவது ஜனநாயகத்தையே கேலி செய்வது போலாகும். ஸ்பெக்ட்ரம் மூலம் அடித்த கொள்ளை பணத்தின் வாயிலாக ஓட்டை விலைக்கு வாங்கி விடலாம் என்று திட்டமிட்ட கருணாநிதியின் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் வேட்டு வைத்து விட்டது. அதனால் தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி குற்றச்சாட்டு கூறுகிறார். தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவுக்கு சாதகமான அலை தற்போது மக்களிடையே வீசுகிறது. இந்த அலை தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. கூட்டணியை மாபெறும் வெற்றியடைய செய்யும். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் ஏறும். ஜெயலலிதா முதல்வராவார். இது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்