முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் விமர்சனம் செய்வதை தடுத்துநிறுத்த ஜனாதிபதியிடம் பா.ஜ தலைவர்கள் முறையீடு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 13 - மத்திய தலைமை கணக்கு அலுவலகம் மீது காங்கிரசார் விமர்சனம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.  ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலை மத்திய தலைமை கணக்கு அலுவலகம் (காக்) வெளியிட்டது. இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமானது. இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதே மத்திய தலைமை கணக்கு அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உரிமம் வழங்கப்பட்ட காலத்தில் நிலக்கரி சுரங்க துறையை பிரதமர் மன்மோகன் சிங் வகித்தார். இதனால் இந்த முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கிப்போய் இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய தலைமை கணக்கு அலுவலகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரசார் இந்த மாதிரி விமர்சனம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் சந்தித்து கேட்டுக்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது மத்திய தலைமை கணக்கு அலுவலகம் மற்றும் அதில் பணிபுரியும் அதிகாரிகளை விமர்சனம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மத்திய தலைமை கணக்கு தலைமை அமைப்பானது அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பை விமர்சனம் செய்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே. அத்வானி கூறினார். விமர்சனம் செய்யும் காங்கிரசாருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்க வேண்டும். ஊழலுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பாரதிய ஜனதா தொடர்ந்து போராடும். கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். உரிமம் ஒதுக்கீடு குறித்து நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் எல்.கே. அத்வானி மேலும் கூறினார். நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால் உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக பொதுமேடையில் விவாதிக்க தயார் என்றும் காங்கிரஸ் கூறி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்