முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 80 ஆயிரம் சிறுதொழில்களை மூடியது தி.மு.க அரசு ஆர்.நல்லகண்ணு பேச்சு

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை ஏப்.- 7 - கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 80 ஆயிரம் சிறு தொழில்களை மூடியதுதான் தி.மு.க அரசின் சாதனை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார். சிவகங்கையில் அ.தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் எஸ்.குணசேகரனை ஆதரித்து காளையார்கோவில் சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் தி.மு.க ஆட்சியில் 80 ஆயிரம் சிறிய தொழில்கள் மூடப்பட்டுள்ளன. கடுமையான மின்வெட்டால் விசைத்தறி, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி வின்னை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. 2 ஜி ஸ்பெக்டரம் ஊழலுக்கு போட்டியாக காமன்வெல்த் ஊழல் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சிரிக்கும் அளவுக்கு இந்தியாவில் ஊழல் நடக்கிறது. டெல்லியில் உள்ள தழித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 756 கோடி பணம் காமன் வெல்த்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க காங்கிரஸ் கட்சியினர் சீரழித்துக் கொண்டிக்கின்றனர். எங்கள் கட்சியின் வேட்பாளர் குணசேகரன் எங்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்ககூடியவர். அவரை கூட்டணியும் கட்டுப்படுத்தும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியின் வேற்றுமையின்றி பாடுபடுவார்கள். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், மீனவர்களை பாதுகாக்கவும் நல்ல நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும் என்று அவர் கூறினார். பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ஜூனன், அதி.மு.க நகர செயலாளர் ஆனந்தன், இளைஞரணி செயலாளர் ஜெயசந்திரன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்கமணி, கங்கைசேகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையது, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்