முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் 1.86 லட்சம் கோடிஇழப்பு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.- 15 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளது குறித்தும்,  இந்த ஒதுக்கீடுகளில்  விதிமுறைகள் பின் பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்தும்  8 வாரங்களுக்குள் பதில்  அளிக்க வேண்டும் என்று மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005 ம் ஆண்டு  நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் ரூ. 1.86 லட்சம் கோடிக்கு மத்திய  அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய  கணக்கு  தணிக்கை குழு  தனது  அறிக்கையில்  கூறியிருந்தது. இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் கிட்டத்தட்ட மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கிப்போனது. இந்த ஊழல் குறித்து  சி.பி. ஐ. ஏற்கனவே  5 கம்பெனிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும்  இந்த ஊழல் விவகாரம் குறித்து  பாராளுமன்ற பொது கணக்கு குழுவும் தனது விசாரணையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2005 ம் ஆண்டு  ஒதுக்கீடு செய்யப்பட்ட  194 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து  செய்ய வேண்டும் என்று கோரியும்  இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் எம்.எல். சர்மான  என்ற வக்கீல்  பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி ஆர்.எம். லோத்தா  தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது.

மத்திய கணக்கு தணிக்கை குழு என்பது  அரசியல்  சாசன அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு.எனவே  அந்த குழுவின் அறிக்கையை நம்புவதில் எந்த தவறும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு  கூறியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமங்கள்  வழங்கியதில்  முறையான  விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து  8 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய  அரசுக்கு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2004 ம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு  கொள்கை  ஏன் பின்பற்றப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு  கேள்வி எழுப்பியுள்ளது. இந்த  விவகாரம்  குறித்து பாராளுமன்ற பொது கணக்கு  குழு  விசாரணை நடத்தி வந்தாலும்  கூட  இந்த பொது நலன் வழக்கில்  இந்த முறைகேடுகள் குறித்து  சுப்ரீம் கோர்ட்டும்  விசாரணை நடத்தும் என்றும்  நீதிபதிகள்  தங்களது உத்தரவில்  கூறியுள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில்  நான்கு  நிறுவனங்களுக்கு  வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை மத்திய  அரசு ரத்து செய்துள்ளது. மேலும்  பல  நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமங்கள்  ரத்து செய்யப்படும்  என்று மத்திய நிலக்கரி துறை  அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்  கூறியுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்ந்து விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய  அரசுக்கு  சுப்ரீம் கோர்ட்டு நேற்று நோட்டீஸ்  அனுப்பியுள்ளது  மத்தியில்  உள்ள  ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்