முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல்விலை உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டம் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 15 - டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஸ்டிரைக், கதவடைப்பு போராட்டம் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. மேலும் கியாஸ் சப்ளைக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கிவிட்டது. மேலும் ஸ்டிரைக், கதவடைப்பு போராட்டம் தீவிரமடையும் நிலை உருவாகி உள்ளது. அமிர்தசரஸ், கர்னால், கான்பூர் ஆகிய நகரங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள பஸ் ஊழியர்கள் சங்கமும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். டீசல் விலை உயர்வால் காய்கறிகள் மற்றும் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை 10 சதவீதம் உயரும் என்று மும்பை காய்கறி சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் விலை உயர்ந்துவிட்டதால் பஸ் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மேற்குவங்காள மாநில பஸ் மற்றும் மினிபஸ் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். பணம் இல்லாவிட்டால் பஸ்களை எங்களால் எப்படி ஓட்ட முடியும்? டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த பஸ் கட்டணத்தை வைத்து எங்களால் பஸ்களை இயக்க முடியாது. அதனால் பஸ் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மினி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபோஷேஸ் தா தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைகளின் வயிற்றில் மத்திய அரசு அடித்துவிட்டது என்று கடுமையாக கூறியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வு வருத்தத்தை அளிக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலை உயர்வு உள்ளது. சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு மீது குற்றமும் சுமத்தியுள்ளார். டீசல் விலை உயர்வானது கொடூரமான நகைச்சுவை என்றும் சாதாரண மக்களுக்கு பெரும் இடி விழு ந்தது மாதிரி என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. டீசல் விலை உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெருவுக்கு சென்று போராட்டம் நடத்துவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்