முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது கடமை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதில்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப் - .7 - வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனது கடமை என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தார்.  மதுரையை சேர்ந்த சத்யவாணி என்பவர் கலெக்டர் சகாயம், அவரது கடமையை மீறி செயல்படுகிறார் என்றும் அதனால் அவரை அந்த பணியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் தலைமையில் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்தின் பதில் மனுவை தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜகோபால் நீதிமன்றத்தில் அளித்தார். 

அதில் அவர், நான் மதுரை மாவட்ட கலெக்டராக கடந்த 22.3.11 முதல் பணி வகித்து வருகிறேன். வாக்காளர்களிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது தலையாய பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் வாக்குப் பதிவை எளிமையாகவும், நேர்மையாகவும் நடத்துவதே எனது பொறுப்பு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்தவொரு பிரதிபலனையும் பாராமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனது பொறுப்பு. 

அதன் அடிப்படையிலேயே மாணவர் சமுதாயத்திடம் எந்தவொரு அரசியல் கட்சியிடம் இருந்தும் லஞ்சம் பெறாமல் யாருக்கும் பயப்படாமல் வாக்களித்து ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பேசினேன். 

இது தவிர அரசு சாரா அமைப்புகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தெருக்கூத்து நடத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கருத்தரங்கு போன்றவற்றின் மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறேன். நான் என்னுடைய எந்த நிகழ்ச்சியிலும் தேர்தல் மூலம் அரசு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பேசியதில்லை. மனுதாரர் எனது பேச்சுக்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கிறார். எனவே என்னை இடமாற்றம் செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறியுள்ளார். 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் கூறும் போது, கலெக்டர் சகாயம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேர்தல் மூலம் மாற்றம் வரும் எனஅறு பேசியுள்ளார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது அவரது பணியல்ல என்றார். 

மாவட்ட கலெக்டரின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது?

அதற்கு தலைமை நீதிபதி, அவரது பேச்சில் உங்களுக்கு எதிராக என்ன இருக்கிறது. அதில் என்ன தவறு உள்ளது. தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் அரசு மூலம் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளில் மாற்றம் வரும் என்ற நோக்கத்தில் அவர் பேசியிருக்கலாம் அல்லவா என்றனர். ஆனால் வழக்கறிஞர் பிரபாகரன், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அவர் இது போன்று பேசக் கூடாது என்றார். இதையடுத்து தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜகோபாலன், தேர்தல் ஆணையம் அவற்றை அனுமதிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளின் படியே வாக்காளர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கலெக்டர் சகாயத்தின் பேச்சுக்கள் எல்லாம் சி.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை நீதிமன்றம் போட்டு கேட்கலாம் என்று கூறி சி.டிக்களை அளித்தார். பின்னர் தலைமை நீதிபதி தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்