இலங்கை-சீனா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,செப்.18 - இலங்கை-சீனா இடையே முக்கிய துறைகளில் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் இலங்கையில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையும் சீனாவும் நெருங்கிய நாடுகளாகி வருகின்றன. இந்தியாவை குறிவைத்து இலங்கையுடன் சீனா நட்பு பாராட்டி வருகிறது. மறுபக்கம் இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை உறவை வளர்த்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யவிடாமலும் இலங்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால்தான் சீனாவுடன் இலங்கை நட்புக்கொண்டு வருகிறது. சிங்கள கடற்படை பணிகளை சீனாவுக்கு அதிபர் ராஜபக்சே காண்ட்ராக்ட் கொடுத்துள்ளார். அதேமாதிரி கொழும்பு நகரின் மத்திய பகுதியில் இந்தியாவுக்கு ஒதுக்கிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தையும் சீனாவுக்கு தாரைவார்த்துள்ளது.

இந்தநிலையில் சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் வு பாங்காவோ இலங்கையில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இலங்கையின் அபரீத வளர்ச்சி என்ற அடிப்படையில் அந்த நாட்டுடன் 16 ஒப்பந்தங்களில் வு பாங்காவோ கையெழுத்திட்டுள்ளார். இதில் இலங்கையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கிடையே விசா முறையில் விதிவிலக்கு, கடற்சார் தொழில் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உள்பட 16 துறைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்தவுடன் சீன அதிபர் ஹூ ஜிண்டேவா இலங்கைக்கு சென்றிருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக அந்த நாட்டு உயர் தலைவர் ஒருவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அதற்கு முன்பு புதுடெல்லி வரும் வழியில் கொழும்புக்கு சீனாவின் ராணுவ அமைச்சரும் கொழும்புக்கு சென்றார். இருநாடுகளிடையே அரசியல் ரீதியாக நட்பு அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிக்கு சீன வங்கிகள் கடனுதவி செய்யவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒப்பந்தங்களில் பெரும் பகுதி வெளியிடப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இவைகள் இந்தியாவுக்கு எதிரானவைகளாக இருந்தாலும் இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: