முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவம்: பல லட்சம் பக்தர்கள் திரண்டனர்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, செப். 19 - திருமலை வெங்கடாசலபதி ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவின் முக்கிய அம்சமான கருடசேவை வரும் 22 ம் தேதி நடைபெறும் என்ற தேவஸ்தன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பூலோக வைகுண்டம் என்று பெருமையுடன் போற்றப்படுவது திருமலை. இங்கு ஏழுமலைகளின் மீது வீற்றிருக்கும் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினசரி திருவிழா கோலம்தான் என்றாலும் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பிரம்மனே வந்து பெருமாளுக்கு விழா எடுக்கிறார் என்பது நம்பிக்கை. இந்த நாளில் காலையும், மாலையும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.

தினம் தினம் ஒரு அலங்காரம், புதுப் புது வாகனம் என ஊர்வலம் வரும் மலையப்பசுவாமியின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

புரட்டாசி மாத்ததில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் பிரம்மோற்சவம் தொடங்குவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். விழாவை முன்னிட்டு திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் நடந்தது. ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக் சேனர் சங்கு, சக்கரம், சதம், கேடயத்தின் தங்க திருட்சை வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் உலா வந்தார்.

அதாவது பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை ஏழுமலையான் சேனாதிபதி பார்வையிடுவது இந்த நிகழ்ச்சியின் ஐதீகம் ஆகும். அனைத்து தேவர்களையும் விழாவுக்கு அழைக்கும் முகமாக கருட உருவம் வரைந்த வெள்ளை கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார். 

கடந்த 18 ம் தேதி தொடங்கி 26 ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 22-ந் தேதி நடக்கிறது. கருடவாகனத்தில் எழுந்தருளும் சுவாமியைக் காண 5 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 25 ம் தேதி தேரோட்டம் நடக்கிறது, 26 ம் தேதி சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு வழங்க பல லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

திருமலை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கோவிலில் சுவாமிக்கு நடத்தப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி., தரிசனம், 9 தினங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. விருந்தினர் மாளிகை, தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிக அளவில் பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்