காவிரி ஆணைய கூட்டம்: முதல்வர் டெல்லியில் பேட்டி

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.20 - காவிரி ஆணைய கூட்டம் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக காவிரி நதிநீர் ஆணையம் கடந்த 1997-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கூட்டம் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டப்படாததால் ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்டும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நேற்று காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். முன்னதாக டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி பி.என். நரசிம்மன் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நேராக ரேஸ்கோர்ஸில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு சென்றார். கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது கர்நாடகத்தில் இருந்து தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தொடர்ந்து 48 டி.எம்.சி.தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார். காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி அடியோடு பாதித்தது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதனால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாகவே இருக்கிறது. வடகிழக்கு பருவமழை அடுத்தமாதம் 3-வது வாரத்தில்தான் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவரைக்கு கர்நாடக அரசானது ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சரி ஒரு நாளைக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீரையாவது வரும் 24 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் மொத்தத்தில் காவிரி நதிநீர் ஆணையம் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: