ம.பி. எல்லையில் ராஜபக்சே வருகைக்கு வைகோ எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சாஞ்சி, செப். 21 - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே டில்லி வந்துள்ளார். அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.

இவர்கள் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார். அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பாவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போலீசாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர்.

விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோ உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.  ராஜபக்சேவின் கொடுமைகளை பற்றி இந்தியில் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுபிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர். இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.

மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கூறினார். இதற்காக தாம் கைதாகவும் தயார் என்றும் வைகோ கூறினார். இந்த தகவலை மத்தியப் பிரதேசத்தில் இருந்து ம.தி.மு.க இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதி அலி தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: